Rahul Gandhi Train: சின்னதா ஒரு ரயில் பயணம்.. மக்களுடன் மக்களாய் பயணித்த ராகுல் காந்தி.. சுவராஸ்ய நிகழ்வு
சத்தீஸ்கருக்கு சென்றுள்ள ராகுல் காந்தி, மக்களுடன் மக்களாய் ரயலில் பயணம் செய்துள்ளார்.
கடந்த 9 ஆண்டுகளில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்த நிலையில், கட்சியை மீட்டெக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர் முயற்சிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, 146 நாள்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார்.
மக்களின் குறைகளை கேட்டறிந்து வரும் ராகுல் காந்தி:
நடைபயணத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, கர்நாடக தேர்தலை முன்னிட்டு உணவை டெலிவரி செய்யும் நபருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். கடந்த மே மாதம், ஹரியானா மாநிலம் அம்பாலாவுக்கு லாரி டிரைவர்களுடன் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
சமீபத்தில், டெல்லியில் இரு சக்கர வாகனத்தை பழுது பார்க்கும் கடைக்கு சென்றார். அதன் தொடர்ச்சியாக, ஹரியானா மாநிலம் சோனிபட்டில் விவசாயிகளை சந்தித்து பேசினார்.
இந்த நிலையில், சத்தீஸ்கருக்கு சென்றுள்ள ராகுல் காந்தி, மக்களுடன் மக்களாய் ரயலில் பயணம் செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிலாஸ்பூர் மாவட்டம் சென்ற ராகுல் காந்தி, அங்கிருந்து மாநிலத்தின் தலைநகர் ராய்ப்பூருக்கு ரயிலில் சென்றுள்ளார்.
மக்களுடன் மக்களாய் பயணம் செய்த ராகுல் காந்தி:
இந்தாண்டின் இறுதியில் சத்தீஸ்கரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு சமூக நல திட்டங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில், 'ஆவாஸ் நியாய சம்மேளனம்' என்ற வீடு வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொள்ளதான் ராகுல் காந்தி, பிலாஸ்பூருக்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்துவுடன், பிலாஸ்பூர்-இத்வாரி இன்டர்சிட்டி ரயிலில் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குமாரி செல்ஜா, மாநில தலைவர் தீபக் பைஜ் உள்ளிட்டோருடன் ராகுல் காந்தி, ஸ்லீப்பர் கோச்சில் பயணம் செய்தார்.
இதுகுறித்து சத்தீஸ்கர் துணை முதலமைச்சர் டி. எஸ். சிங் டியோ கூறுகையில், "அவர் (ராகுல்) சாலை அல்லது ஹெலிகாப்டர் மூலம் திரும்புவார் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்தது. நாங்கள் உணவு உண்ணும்போது திடீரென்று காரில் உட்காருங்கள் நாங்கள் ரயிலில் செல்வோம் என்றார்.
மக்களிடம் கருத்துகளை கேட்க அவருக்கு ஆர்வம் உண்டு. களத்தில் நிலைமை என்ன. கடந்த 10-15 வருடங்களில் அவருக்கு விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தேன். எல்லாவற்றையும் பற்றி கேட்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களை சந்தித்து அவர்களின் நிலை குறித்து கேட்டறிகிறார்" என்றார்.
இதையும் படிக்க: Jayalalitha EPS: அன்று ஜெயலலிதா.. இன்று இபிஎஸ்..! கூட்டணியை உதறி தள்ளிய அதிமுக.. திரும்பிய வரலாறு!