இதன் விலையெல்லாம் குறைஞ்சுதே.. பெட்ரோல், டீசல் விலை ஏன் குறைக்கப்படவில்லை..ராகுல் காந்தி கேள்வி..!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விலை குறைக்கப்பட்ட பிறகும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏன் குறைக்கப்படவில்லை என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி.
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானை சென்றடைய உள்ளது.
இந்நிலையில், மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, "சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விலை குறைக்கப்பட்ட பிறகும் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலை ஏன் குறைக்கப்படவில்லை" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "கச்சா எண்ணெய் - 25% குறைக்கப்பட்டுள்ளது; எல்பிஜி - 40% குறைக்கப்பட்டுள்ளது. இவை 6 மாதங்களுக்கான சர்வதேச விலை தரவு. அப்படியிருந்தும், பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை ஏன் குறையவில்லை?" என பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடியை விமர்சித்த அவர், "பிரதமரே, உங்கள் கொள்ளைக்கு எதிரான ஜனநாயக குரலாக இந்திய ஒற்றுமை நடைபயணம் ஒலிக்கிறது. எனக்கு பதில் சொல்லுங்கள்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
कच्चा तेल - 25% सस्ता
— Rahul Gandhi (@RahulGandhi) December 3, 2022
एलपीजी - 40% सस्ती
ये 6 महीनों के अंतरराष्ट्रीय कीमतों के आंकड़े हैं। फिर भी पेट्रोल, डीज़ल और गैस सिलेंडर के दाम कम क्यों नहीं हुए?
प्रधानमंत्री जी, आपके 'लूट-तंत्र' के खिलाफ लोकतंत्र की आवाज़ है - भारत जोड़ो यात्रा। जवाब दीजिए!
கன்னியாகுமரியில் இருந்து செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கிய இந்திய ஒற்றுமை நடைபயணம், இன்னும், 2,355 கிலோமீட்டர் செல்ல உள்ளது. இது அடுத்த ஆண்டு காஷ்மீரில் முடிவடைகிறது. இந்திய வரலாற்றில் எந்த ஒரு இந்திய அரசியல் தலைவரும் மேற்கொண்டிராத மிக நீண்ட நடைப்பயணம் இது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தது. வரவிருக்கும் தேர்தலுக்காக கட்சியை ஒருங்கிணைந்து தொண்டர்களுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக இந்த நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி குறித்து விமர்சித்த ராகுல் காந்தி, "சீன ராணுவத்தால் கூட இந்தியாவுக்கு செய்ய முடியாததை, பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜிஎஸ்டி கொளை மூலம் செய்து முடித்துள்ளனர்" என கூறி இருந்தார்.