I.N.D.I.A. Meeting: விவசாயிகள், தொழிலாளர்களை குறிவைக்கும் ராகுல் காந்தி.. மும்பை கூட்டத்தில் நடந்தது என்ன?
"நாம் ஒன்றுபட்டால் பாஜக வெற்றி பெறுவது சாத்தியமில்லை. எனவே, நாம் திறமையான வழியில் ஒன்றுபட வேண்டும்" என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.
I.N.D.I.A (எதிர்க்கட்சிகள்) கூட்டணியின் மூன்றாவது கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில், மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதுமட்டும் முக்கிய கட்சிகளை சேர்ந்த 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கூட்டணி கட்சி தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய ராகுல் காந்தி, "இந்த மேடை இந்தியாவின் 60 சதவிகித மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நாம் ஒன்றுபட்டால் பாஜக வெற்றி பெறுவது சாத்தியமில்லை. எனவே, நாம் திறமையான வழியில் ஒன்றுபட வேண்டும். இங்கு இரண்டு முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மும்பை கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி:
ஒருங்கிணைப்புக் குழுவும் துணைக் குழுக்களும் உருவாக்கப்பட்டன. இரண்டாவதாக, தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளும் துரிதப்படுத்தப்பட்டு முடிக்கப்படும். பாஜகவை இந்தியா தோற்கடிக்கும் என்பது உறுதி. பிரதமரும் அதானியும் ஊழலில் கூட்டணி வைத்துள்ளனர். அதை இந்தியா கூட்டணி நிரூபிக்கும்.
இந்த நாட்டின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு என்ன செய்ய போகிறோம் பற்றிய தெளிவான திட்டங்களை நாங்கள் முன்வைக்கப் போகிறோம். இந்தக் கூட்டணிகளின் தலைவர்களுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட உறவுகள் மிகவும் முக்கியமானவை. இந்த சந்திப்புகள் நல்லுறவை உருவாக்கி, நாங்கள் ஒன்றாக வேலை செய்வதை உறுதி செய்துள்ளது. எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தலைவர்களிடையே வளைந்து கொடுப்பதற்கான தன்மை உள்ளது" என்றார்.
சமீபத்தில் தான் மேற்கொண்ட லடாக் பயணம் குறித்து பேசிய ராகுல் காந்தி, "நான் லடாக்கில் ஒரு வாரம் இருந்தேன். அங்கு நான் சீனர்கள் இருக்கும் பாங்காங் ஏரிக்குச் சென்றேன். ஏரியைச் சுற்றி இருக்கும் ஆடு மேய்ப்பர்கள் மற்றும் பொது மக்களுடன் விரிவாக விவாதித்தேன். இந்திய நிலத்தை சீனர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்று சொன்னார்கள். பிரதமர் சீனர்களைப் பற்றி பொய் சொல்கிறார் என்று என்னிடம் சொன்னார்கள். லடாக் மக்கள் இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்டதாக உணர்கிறார்கள்" என்றார்.
ஸ்டாலின் பேசியது என்ன?
இதை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "எங்கே சென்றாலும், எங்கே பேசினாலும் தன்னுடைய ஆட்சியின் சாதனைகளைச் சொல்லாமல் எங்களைப் பற்றியே பேசி எங்கள் கூட்டணிக்கு சிறந்த 'பப்ளிக் ரிலேஷன் ஆபீஸராக' 'பிரைம் மினிஸ்டர்' மோடி செயல்பட்டு வருகிறார். I.N.D.I.A கூட்டணியை பாப்புலர் ஆக்கியதற்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
9 ஆண்டுகள் ஆட்சி செய்தும் சொல்வதற்கு சாதனைகளே இல்லாத ஆட்சி மத்திய பா.ஜ.க ஆட்சிதான். சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டியுள்ள 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றிப் பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார். மோடி ஆட்சி நாளுக்குநாள் ‘unpopular’ ஆகி வருகிறது" என்றார்.