Rahul Gandhi Case: மன்னிப்புக்கு ”நோ” சொன்ன ராகுல் காந்தி.. உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
அவதூறு வழக்கில் மன்னிப்பு கோர முடியாது என ராகுல் காந்தி பிரமாணபத்திரம் தாக்கல் செய்த நிலையில், இன்று வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:
மோடி சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டப்போது, அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை ரத்து செய்யக்கோரி ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தை நாடினார். கடந்த மாதம் 21ம் தேதி இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
உச்சநீதிமன்றம் உத்தரவு:
விசாரணையை தொடர்ந்து, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், அவதூறு வழக்குத் தொடர்ந்த பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடிக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து புர்னேஷ் தாக்கல் செய்த பதில் மனுவில் “ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்காமல், அவரது மேல்முறையீட்டு மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டு இருந்தார்.
மன்னிப்புக்கு “நோ”..
இதையடுத்து ராகுல் காந்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டபிரமாணபத்திரத்தில் “ராகுல் காந்தி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர். எனவே அவர் ஆளும் அரசின் நடத்தை மற்றும் செயல்திறனை விமர்சிப்பது வழக்கமான ஒன்றுதான். ராகுல் காந்திக்கு அளித்த தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அவர் எப்போதோ அதை செய்திருப்பார். ஆகவே இந்த அவதூறு வழக்கு தொடர்பாக ஒருபோதும் ராகுல் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையிலும், எதிர்வரும் கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையிலும் மேல்முறையீடு மனுவை விசாரித்து முடிக்கும் வரை ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி
வழக்கு விசாரணை:
இந்த நிலையில் தான், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரண இன்று நடைபெற உள்ளது. விசாரணையின் முடிவில் இடைக்கால உத்தரவு ஏதேனும் பிறப்பிக்கப்படுமா என, காங்கிரஸ் கட்சியினர் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
வழக்கு கடந்து வந்த பாதை:
கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது மோடி எனும் சமூகப் பெயரை இழிவுபடுத்தும் விதமாக, அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக எம்எல்ஏவும் குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி தொடர்ந்த வழக்கில், ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் ராகுல் காந்தி இழிவுபடுத்தியுள்ளதாக என்று குற்றம் சாட்டினார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2023ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அவர் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தண்டனைக்கு ஆட்சேபம் தெரிவித்த ராகுல் காந்தி, சூரத் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகி, தனது தண்டனைக்கு தடை விதிக்கக் கோரினார். இது ஏப்ரல் 20 அன்று நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து, குஜராத் உயர்நீதிமன்றமும் ராகுல் காந்தியின் கோரிக்கையை கடந்த 7ம் தேதி தள்ளுபடி செய்தது. அதனை தொடர்ந்து தான் இறுதியாக ராகுல் காந்தி தற்போது உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளர்.