"பாரத மாதாவை ரத்தம் சிந்த வைக்க நினைக்கிறார்" ராகுல் காந்தி மீது குடியரசு துணைத் தலைவர் மீண்டும் அட்டாக்!
தேசத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சில தனிநபர்கள் செயல்படுகிறார்கள் என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்துள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்துவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்ட போதிலும், தேசத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சில தனிநபர்கள் செயல்படுகிறார்கள் என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தியை மீண்டும் விமர்சித்த குடியரசு துணைத் தலைவர்: ஆர்.எஸ்.எஸ் குறித்து அமெரிக்காவில் ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு தொடர் பதிலடி அளித்து வரும் குடியரசு துணைத் தலைவர், தேசிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நாட்டின் நலன்களுக்கு எதிராக செயல்படுவோர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்றும் அவர் கூறினார். தேசம் என்ற கருத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் எந்த சுயநல காரணத்திற்காக பாரத மாதாவை ரத்தம் சிந்த வைக்க நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
அஜ்மீரில் உள்ள ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று (13.09.2024) உரையாற்றிய அவர், நாட்டின் எல்லைகளைத் தாண்டி அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு இந்தியரும் நமது கலாச்சாரம், தேசியத்தின் தூதர் என்று அவர் கூறினார்.
புதிய கல்வி கொள்கை: இதற்கு உதாரணமாக அடல் பிகாரி வாஜ்பாயை அவர் குறிப்பிட்டார். நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாய், உலக அரங்கில் பல்வேறு நாடுகளில் பேசியபோது, இந்தியாவின் நலன்கள் குறித்து பேசியதாகவும் இந்தியாவுக்கு எதிராக அவர் ஒருபோதும் பேசவில்லை என்றும் குடியரசு துணைத் தலைவர் குறிப்பிட்டார்.
அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்கள் மாறுபட்டபோதும், தேசிய உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பு குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதை ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். புதிய கல்விக் கொள்கை எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்புடையது அல்ல எனவும், அது தேசிய முன்முயற்சியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக மாற்றத்திற்கான கருவியாக கல்வி உள்ளது என்று கூறிய குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடுவதற்கான கருவியாகவும் அது செயல்படுகிறது என்று எடுத்துரைத்தார்.
அமெரிக்காவுக்கு சென்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பெண்கள் என்றாலே வீட்டில் இருந்தபடி சாப்பாட்டை சமைத்து தர வேண்டும். அதிகமாக பேசக்கூடாது என ஆர்எஸ்எஸ் விரும்புவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். ராகுல் காந்தியின் கருத்துக்கு பாஜக கடுமையைாக எதிர்வினையாற்றியது.