Rahul Gandhi: “ட்ரம்ப் பொய் சொல்கிறார் என கூறும் தைரியம் மோடிக்கு உள்ளதா.?“ - கேள்விகளால் விளாசிய ராகுல் காந்தி
மக்களவையில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிதமர் மோடி விளக்கமளித்த நிலையில், ட்ரம்ப் பொய் சொல்கிறார் என கூறும் தைரியம் மோடிக்கு உள்ளதா என கேட்ட ராகுல் காந்தி, மேலும் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

‘ஆபரேஷன் சிந்தூர்‘ குறித்து நேற்று மக்களவையில் பிரதமர் மோடி விளக்கமளித்த நிலையில், எதிர்க்கட்சி‘த் தலைவர் ராகுல் சரமாரி கேள்விகளை எழுப்பினார். அதில் முக்கியமாக, ட்ரம்ப் பொய் சொல்கிறார் என கூறும் தைரியம் பிரதமருக்கு உள்ளதா என கேட்டார். அவரது பேச்சு குறித்து விரிவாக பார்ப்போம்.
“ட்ரம்ப் பொய் சொல்கிறார் என கூறும் தைரியம் உள்ளதா.?“
மக்களவையில் நேற்று எதிர்க்கட்சித் தலைவராக சரமாரி கேள்விகளை எழுப்பிய ராகுல் காந்தி, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேரை தானே நிறுத்தியதாக ட்ரம்ப் இதுவரை 29 முறை கூறிவிட்டதாகவும், ‘ஆபரேஷன் சிந்தூர்‘ விவகாரத்தில் ட்ரம்ப் பொய் சொல்கிறார் என கூறும் தைரியம் மோடிக்கு உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
மேலும், பஹல்காம் தாக்குதலின் மூளையான பாகிஸ்தான் ராணுவத் தளபதி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் விருந்து சாப்பிடுகிறார், அதை ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடியால் கேட்க முடிந்ததாக எனவும் ராகுல் கேள்வி எழுப்பினார்.
அதோடு, தனது இமேஜை பாதுகாக்க, ராணுவத்தை பிரதமர் மோடி பயன்படுத்துவதாகவும், பாதுகாப்புப் படைகளை அவர் தவறாக பயன்படுத்துவது அபாயகரமானது எனவும் கூறினார் ராகுல்.
“போரின் அடிப்படையே பாதுகாப்பு அமைச்சருக்கு தெரியவில்லை“
தொடர்ந்து பேசிய ராகுல், இந்திய படைகளின் நகர்வுகள் குறித்த தகவல்களை சீனா பாகிஸ்தானுக்கு வழங்கியதாகவும், ஆனால், சீனா என்ற பெயரையே வெளியுறவுத்துறை அமைச்சரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் கூறவில்லை என குற்றம்சாட்டினார்.
தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்றும், அவர்களின் கைகளை கட்டிவிட்டு போருக்கு அனுப்பக் கூடாது என்று ராகுல் தெரிவித்தார்.
ஒரு இக்கட்டான சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியாத நிலையில் அரசு உள்ளதாக விமர்சித்த ராகுல், போரின் அடிப்படையே நமது பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு தெரியவில்லை என குற்றம்சாட்டினார்.
“பாகிஸ்தானிடம் தாக்குதல் குறித்து தெரிவித்தது அதிர்ச்சி அளிக்கிறது“
மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்‘ நடந்துகொண்டிருக்கும் போதே, பாகிஸ்தானிடம் பேசியதாக அமைச்சர் ராஜநாத் சிங் கூறியது அதிர்ச்சி அளித்ததாக ராகுல் கூறினார். பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தப் போகிறோம் என பாகிஸ்தானிடமே நமது அரசு தகவல் தெரிவித்துள்ளது என குற்றம்சாட்டிய ராகுல், பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை தாக்க வேண்டாம் என கூறியது மிகப்பெரிய தவறு என்றும் கூறினார்.
மேலும், ‘ஆபரேஷன் சிந்தூர்‘ நடவடிக்கையின் போது, நமது விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட உண்மை என தெரிவித்த ராகுல் காந்தி, இந்திய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்றும் ராணுவத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றும் தைரியமிருந்தால் அவையில் பிரதமர் தெளிவுபடுத்தட்டும் என்றும் ராகுல் விளாசினார்.






















