தேசிய சிறுதானிய உணவுப் போட்டி: முதலிடம் பிடித்த உணவு இதுதான்!
தேசிய சிறுதானிய உணவுப் போட்டியில் ராகி மோதகம் முதலிடத்தைப் பிடித்தது. டெல்லி ஓம் சாந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் பயிலும் ஷாலினி ராஜ் என்ற மாணவி தான் இந்தப் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
தேசிய சிறுதானிய உணவுப் போட்டியில் ராகி மோதகம் முதலிடத்தைப் பிடித்தது. டெல்லி ஓம் சாந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டில் பயிலும் ஷாலினி ராஜ் என்ற மாணவி தான் இந்தப் பரிசை தட்டிச் சென்றுள்ளார்.
2022 2023 சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் தேசிய சிறுதானிய உணவுப் போட்டி நடைபெற்றது. இதில் முதலிடத்தை ராகி மோதகம், இரண்டாம் இடத்தை ராகி சாலட், மூன்றாம் இடத்தை சிறுதானிய சர்க்கரைப் பொங்கல் பெற்றன.
இரண்டாம் இடத்தைப் பிடித்த பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சித்காரா ஹாஸ்பிடாளிட்டி பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அனுபவ் நவுடியால். சாக்சம் கவுசல் ஆகியோர் இணைந்து செய்தனர். அவர்கள் பாஜ்ரா, ஜோவார், குதிரைவாலி ஆகிய தானியங்களை சேர்த்துச் செய்தனர்.
நொய்டாவில் உள்ள இந்தியன் கல்லினரி இன்ஸ்டிட்யூட் மையத்தில் மாணவிகளான ஹிரான்மோய் சலிதா, ஹன்ஸிகா ஜாதியாலா ஆகியோர் மூன்றாம் இடத்தை பிடித்தனர். இவர்கள் சிறுதானியம் கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்திருந்தனர்.
வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மூன்றுநாள் சிறுதானிய உணவுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
சிறுதானியங்கள் ஏழைகளின் உணவு என்று அறியப்படுகிறது. சிறுதானிய உற்பத்தியையும், அதை உண்பதையும் மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
சிறுதானியங்களில் கால்சியம், மெக்னீசியம் போன்ற எண்ணற்ற மினரல்கள் நிரம்பியுள்ளன. இது மட்டுமல்லாமல், ஆன்டிஆக்சிடன்ட், நார்ச்சத்து மற்றும் புரதம் ஆகியவையும் கூட இருக்கிறது. இவை அனைத்துமே நம்மில் உடல் பருமனை தடுக்கும். சிறுதானியங்களில் உயர்ந்த தரத்திலான கார்ப்போஹைட்ரேட், புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால், இவை நம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.
2022 - 23 ஆண்டை, சர்வதேச சிறுதானியங்களின் ஆண்டாக அனுசரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார். முன்னதாக, 2023ஆம் ஆண்டை சிறுதானிய ஆண்டாக அனுசரிக்க வேண்டும் என்று ஐ.நா. அமைப்பு தீர்மானம் இயற்றியிருந்தது. வங்கதேசம், கென்யா, நேபாள், நைஜீரியா, ரஷ்யா, செனகல் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியா எடுத்த முன்னெடுப்பால் ஐக்கிய நாடுகள் அமைப்பு 2023-ம் ஆண்டை சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சர்வதேச ஐ.நா. அமைப்பும், மத்திய அரசும் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிறுதானியங்களில் ஏராளமான நன்மைகள் உள்ளன. இதனையறிந்து நாம் சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.