உத்தரகாண்ட்: 4 மாதங்களில் 3ஆவது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு!
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் 3ஆவது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்ட் மாநில பாஜக சட்டமன்றக்கட்சி தலைவராக புஷ்கர் சிங் தாமியை எம்எல்ஏக்கள் தேர்வு செய்தனர். தீரத்சிங் ராவத் ராஜினாமா செய்த நிலையில் டேராடூனில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட்டார். பதவியேற்று 6 மாதத்தில் எம்எல்ஏவாக தேர்வாக முடியாத சூழல் ஏற்பட்டதால் தீரத் சிங் ராஜினாமா செய்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்கவுள்ளதால் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. அங்கு கடந்த 4 மாதங்களில் 3ஆவது முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், முதல்வராக திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக பதவி ஏற்றார். ஆனால் இவரது செயல்பாட்டில் திருப்தி இல்லை என கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் அதிருப்திகளை கட்சி மேலிடத்திற்கு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை, முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்தை பதவி விலகச் செய்தது. அதற்குப்பதிலாக 2021 மார்ச் மாதம் அதாவது 4 மாதத்திற்கு முன்பு தான் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவ் பதிவேற்றுக்கொண்டார். இவர் உத்தரகாண்டில் மாநிலத்தில் மக்களவை உறுப்பினராக இருந்தவர். ஆனால் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் படி, சட்டமன்ற உறுப்பினர் இல்லாத ஒருவர், முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் 6 மாதத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற வேண்டும். இல்லாவிடில் அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகதான அமையும்.
ஆனால் எந்தவொரு தொகுதியிலும் தீரத் சிங் ராவ் போட்டியிடுவதற்கான சூழல் இல்லாத நிலை தற்போது ஏற்பட்டு விட்டது. ஏனென்றால் சட்டசபையின் பதவிக்காலம் முடிவடைய ஒராண்டு காலம் தான் உள்ளது எனில் சட்டப்படி, அங்கு இடைத்தேர்தல் நடத்த முடியாது. இதுபோல தான் தற்போது உத்தரகாண்டின் நிலைமை உள்ளது. குறிப்பாக உத்தரக்காண்ட மாநில சட்டசபையின் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டோடு முடிவடையவுள்ள நிலையில் சட்டப்படி இங்கு இடைத்தேர்தல் நடத்தவாய்ப்பில்லை. அதிலும் கொரோனா காலம் என்பதால் எந்த தேர்தலையும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் முன்வரவில்லை. எனவே தான் கடந்த சில நாட்களாகவே மாநில கட்சியினரிடையே தற்போதைய முதல்வராகவுள்ள தீரத் சிங் ராவ்விற்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் எழுந்து வந்தது. இதனையடுத்து கட்சியின் உயர் மட்டக்குழு அவரை டெல்லிக்கு அழைத்திருந்த நிலையில் தான், பிரச்சனைக்குறித்து பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசியுள்ளார். இதன் பின்னர் தான், அரசியல் நெருக்கடியின் காரணமாக முதல்வராக பதவியேற்ற 4 மாதங்களிலேய தீரத் சிங் ராவ் திடீரென அவரது ராஜினாமா கடிதத்தினை டேராடூனில் உள்ள ஆளுநர் பேபி ராணி மௌரியாவை சந்தித்து வழங்கினார்.