பஞ்சாப் தேர்தல்: லோக் இன்சாஃப் கட்சித் தலைவர் கைது; காரணம் இதுதான்!
பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அங்கு ஆதம்நகர் தொகுதி எம்எல்ஏவும் லோக் இன்சாஃப் கட்சியின் தலைவருமான சிமர்ஜித் சிங் பெய்ன்ஸ் கைது செய்யப்பட்டார்.
பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் அங்கு ஆதம்நகர் தொகுதி எம்எல்ஏவும் லோக் இன்சாஃப் கட்சியின் தலைவருமான சிமர்ஜித் சிங் பெய்ன்ஸ் கைது செய்யப்பட்டார். இன்று மதியம் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் பரபரப்புக்கு மத்தியில் இந்த கைது நடந்தது.
உத்திரப்பிரதேசம், உத்தர்காண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்டது. இதில் பஞ்சாப் மாநிலத்திற்கு வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்று பிற்பகல் பஞ்சாப் அரசியலில் மிகவும் பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது. முன்னதாக நேற்று ஆதம் நகர் காங்கிரஸ் வேட்பாளர் கமல்ஜித் சிங் கர்வாலின் ஆதரவாளர்கள் சிலர் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் பெய்ன்ஸுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. லோக் இன்சாஃப் கட்சித் தலைவர் பெய்ன்ஸின் தூண்டுதலின் பேரிலேயே தனது பொதுக்கூட்டத்தை சீர்குலைக்கும் வகையில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கார்வால் குற்றஞ்சாட்டினார்.
பெய்ன் மீது ஏற்கெனவே பாலியல் பலாத்காரம், கொரோனா நடைமுறையை மீறியது, திருட்டு, கிரிமினல் குற்றம், அவதூறு, அரசு அதிகாரிகள் உத்தரவை மீறியது என 15 வழக்குகள் உள்ளன. பாலியல் பலாத்கார வழக்கில் பெய்ன்ஸை கைது செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர் கார்வால், தனது ஆதரவாளர்களுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அங்கு தனது மகன் மற்றும் 150 பேருடன் வந்த பெய்ன்ஸ் வாகனங்களை சேதப்படுத்தி, காங்கிரஸ் தொண்டர்களை தாக்கிவிட்டு வானத்தை நோக்கி சுட்டு அச்சுறுத்திச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
பெய்ன்ஸ் இந்தமுறை தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பில்லை என்ற நிலையில்தான் அவர் இப்படியான தாக்குதலில் ஈடுபடுவதாக கார்வால் கூறியுள்ளார்.
அதேவேளையில் தன்னை எதிர்கொண்டு வெற்றி பெற முடியாது என்று தெரிந்ததால் தன் மீது கார்வால் போலி குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக பெய்ன்ஸ் கூறுகிறார்.
இந்நிலையில் தான் இன்று மதியம் வழக்கு சம்பந்தமாக வழக்கறிஞரை சந்திக்கும் நிமித்தமாக லூதியானா நீதிமன்றம் வந்த பெய்ன்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபில் 117 சட்டமன்ற இடங்களுக்கு தேர்தல் நடக்க உள்ளது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 77 இடங்களை வென்று அறுதிப் பெரும்பான்மையை வென்றது. மேலும் பத்தாண்டுகளுக்குப் பிறகு சிரோமணி அகாலி தளம் - பாஜக அரசாங்கத்தை அகற்றியது. மறுபுறம், ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் மொத்த இடங்களில் 20 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இந்த முறை ஆம் ஆத்மி கூடுதல் இடங்களில் வெற்றி பெறும் எனக் கணிக்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி தற்போது ஆட்சியில் இருந்தாலும் கட்சிக்குள் நடந்த உட்கட்சி மோதல் அவர்களுக்கு எதிராக அமையும் என தேர்தல் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பஞ்சாப் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி அறிவிக்கப்பட்டார்.