Puducherry Corona Cases : கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு
புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 1,445 நபர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் 30 நபர்கள் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.
![Puducherry Corona Cases : கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு Puducherry Covid 19 cases : 1445 new coronavirus cases with 30 death in state Puducherry Corona Cases : கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.. புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 30 பேர் உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/22/eea11f351c85ecb8611100da5023c115_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் கொரோனா வைரசின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. அந்த மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் ரங்கசாமி மட்டும் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், பிற அமைச்சர்கள் இதுவரை பங்கேற்கவில்லை. இதனால், கொரோனா தடுப்பு பணிகள், நிவாரணப் பணிகளை இதுவரை பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனே மேற்பார்வையிட்டு வருகிறார்.
இந்த நிலையில், அந்த மாநிலத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அந்த மாநில சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ புதுச்சேரி மாநிலத்தில் 9 ஆயிரத்து 92 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 1140 நபர்களுக்கும், காரைக்காலில் 203 நபர்களுக்கும், ஏனாமில் 75 நபர்களுக்கும், மாஹேவில் 27 நபர்களுக்கும் என மொத்தம் 1445 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர, புதுச்சேரியில் 22 நபர்களும், காரைக்காலில் 4 பேரும், ஏனாமில் 4 பேரும் என மொத்தம் 30 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் ஆண்கள் 15 பேரும், பெண்கள் 15 பேரும் ஆவர். இன்று 30 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மொத்தமாக 1325 ஆக உயர்ந்துள்ளது. தினசரி உயிரிழப்பு அதிகரித்து வருவதால், புதுச்சேரியில் கொரோனா இறப்பு விகிதம் 1.40% ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் இதுவரை கொரோனா வைரஸ் காரணமாக 94 ஆயிரத்து 612 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை அந்த மாநிலத்தில் மருத்துவமனைகளில் 2112 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளிலே 15 ஆயிரத்து 228 நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதுவரை மாநிலம் முழுவதம் 17 ஆயிரத்து 340 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒருநாள் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 2 ஆயிரத்து 11 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணம் அடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை புதுச்சேரியில் 75 ஆயிரத்து 947 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசில் இருந்து குணம் அடைவோர் விகிதமும் 79.36 சதவீதமாக அதிகரித்துள்ளது. புதுச்சேரி முழுவதும் இதுவரை 2 லட்சத்து 39 ஆயிரத்து 301 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. "இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை அரசு முழுமையாக இன்னும் பொறுப்பு ஏற்காத காரணத்தால், கொரோனா தடுப்பு பணிகளை முழுமையாக கண்காணித்து வரும் மாநில பொறுப்பு ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கொரோனா தடுப்பூசிகளை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)