"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி சிறையில் இருந்த நளினியை சந்தித்துவிட்டு உணர்ச்சிவசப்பட்டவர் பிரியங்கா காந்தி என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தந்தை ராஜீவ் காந்தியை கொலை செய்த நளினியை நேரில் சென்று பார்த்துவிட்டு இரக்கப்பட்டவர் பிரியங்கா காந்தி என வயநாடு பிரச்சாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உருக்கமாக பேசியுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும், ரேபரேலி தொகுதி எம்.பி., பதவியை தக்கவைத்துக் கொண்டு, வயநாடு எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
பிரியங்கா காந்தி குறித்து உருக்கமாக பேசிய ராகுல் காந்தி:
இதனால் காலியான வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பிரியங்கா காந்தி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் 13ஆம் தேதி, அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வயநாட்டில் பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்றைய பிரச்சாரத்தில் பிரியங்கா காந்திக்காக அவரது சகோதரரும் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "எனது தந்தையின் (ராஜீவ் காந்தி) கொலை வழக்கில் சிக்கிய பெண்ணை நேரில் சென்று பார்த்து கட்டிப்பிடித்தவர்.
"அன்பின் அரசியல்.. பாசமான அரசியல்"
நளினியை சந்தித்துவிட்டு திரும்பி வந்த பிறகு தான் உணர்ச்சிவசப்பட்டதாக கூறினார். பின்னர், அவருக்காக இரக்கப்பட்டார். அவர் பெற்ற பயிற்சி இது. என்னைப் பொறுத்தவரை, இது இந்தியாவில் செய்யப்பட வேண்டிய அரசியல். வெறுப்பு அரசியல் அல்ல. அன்பின் அரசியல். பாசமான அரசியல்.
இன்று இந்தியாவில் அரசியல் சட்டத்தைப் பாதுகாப்பதே நமது முதன்மையான போராட்டம். அரசமைப்புச் சட்டம் தாழ்மையுடனும் அன்புடனும் உருவாக்கப்பட்டது. இன்று நாட்டில் நடைபெறும் முக்கியப் போராட்டம், நமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கான போராட்டம். நமக்குக் கிடைக்கும் பாதுகாப்பு, நமது நாட்டின் மகத்துவம், அனைத்தும் அரசியலமைப்பிலிருந்து வெளிப்பட்டது.
We are fighting a political battle, with the main fight being between those who want to defend the Constitution and those who want to destroy it. The Constitution is the ultimate protector of all Indian citizens, ensuring equality and justice for all. It doesn't discriminate… pic.twitter.com/M2wSr3cYa9
— Congress (@INCIndia) November 3, 2024
அரசியல் சாசனம் கோபத்துடனோ, வெறுப்புடனோ எழுதப்படவில்லை. ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியவர்கள், துன்பப்பட்டவர்கள், வருடக்கணக்கில் சிறைவாசம் அனுபவித்தவர்கள் எழுதியது. அரசியலமைப்பை அவர்கள் பணிவுடன், அன்புடன், பாசத்துடன் எழுதினார்கள்" என்றார்.