உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது - புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட நாராயணசாமி கைது
’’உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் பதவி விலகக்கோரியும் நாங்கள் போராட்டம் நடத்தினோம் - நாராயணசாமி’’
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்தில் லகிம்பூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் விவசாயிகள் மீது மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஸ்ரா மகன் மற்றும் உறவினர்கள் சென்ற கார் புகுந்து விபத்து ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விபத்து மற்றும் வன்முறை சம்பவங்களில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் பிரியங்கா காந்தி சென்றார். அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் திடீர் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள். புதுச்சேரியிலும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெரியகடை போலீசார் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. அனந்தராமன் உள்பட சுமார் 50 பேரை கைது செய்தனர். கைதானவர்கள் கரிக்குடோனில் தங்க வைக்கப்பட்டனர். சிறிது நேரத்துக்குப்பின் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
உத்தர பிரதேசத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்ற பிரியங்காவை போலீசார் கைது செய்து உள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொடுங்கோல் மோடி அரசை கண்டித்தும் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அடியாட்களை கொண்டுவந்து விவசாயிகளின் நிலத்தை பறித்து கார்பரேட் நிறுவனங்களிடம் கொடுக்க மத்திய அரசு துடிக்கிறது. இது தொடர்பான போராட்டத்தில் உத்தர பிரதேசத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய மந்திரியின் உறவினர்களே அடியாட்களுடன் வந்து விவசாயிகளை கொன்று உள்ளனர். அந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்காவை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகளை முடக்கும் மோசமான ஆட்சி உத்தர பிரதேசத்திலும் நடக்கிறது. அந்த ஆட்சி தலித், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளது. பிரியங்கா கைது செய்யப்பட்டதை கண்டித்தும், பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் பதவி விலகக்கோரியும் நாங்கள் போராட்டம் நடத்தினோம் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.