SC Vs President: யாருக்கு பவர் அதிகம்? குடியரசு தலைவர் Vs உச்சநீதிமன்றம் - ஷாக் அடிக்கும் அதிகாரங்கள்
CJI Vs Presiudent: துணைக் குடியரசு தலைவரின் பேச்சால் குடியரசு தலைவர் மற்றும் உச்சநீதிமன்றம் அதிகாரங்கள் தொடர்பான கேள்வி எழுந்துள்ளது.

CJI Vs Presiudent: குடியரசு தலைவர் மற்றும் உச்சநீதிமன்றம், ஆகிய இருவரில் யாருக்கு வலுவான அதிகாரம் உள்ளது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
துணைக்குடியரசு தலைவர் பேச்சு:
தமிநாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாக்கள் மீது முடிவு எடுக்க குடியரசுதலைவர் மற்றும் ஆளுநருக்கு கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக பேசிய துணைக்குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர், ”குடியரசு தலைவருக்கு உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. என் வாழ்நாளில் இப்படி ஒரு நிலையை பார்ப்பேன் என்று நான் கருதவில்லை. ”முழுமையான நீதியை" உறுதி செய்வதற்குத் தேவையான எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கும் அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்பின் 142வது பிரிவு, ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையாக மாறியுள்ளது” என துணைக்குடியரசு தலைவர் விமர்சித்தார்.
எழும் கேள்விகள்..!
துணைக்குடியரசு தலைவரின் பேச்சை தொடர்ந்து நீதிமன்றம் சரியாக தான் செயல்படுகிறதா? சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறதா? உச்சநீதிமன்றத்தால் குடியரசு தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்க முடியுமா? அவர் எடுத்த முடிவுகளை நீதித்துறை மறுஆய்வு செய்யவும் உச்ச நீதிமன்றத்திற்கு போதுமான அதிகாரம் உள்ளதா? என பல கேள்விகள் எழுந்துள்ளன.
குடியரசு தலைவரின் பணிகள் என்ன?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, குடியரசு தலைவருக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் வெவ்வேறு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் மத்திய அரசின் தலைவர், நிர்வாக அதிகாரங்கள் குடியரசுத் தலைவரிடம் மட்டுமே இருக்கும். இது மட்டுமல்லாமல், அவர் முப்படைகளின் உச்ச தளபதியாகவும் உள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் உரிமையும் உண்டு. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியத்தின் பரிந்துரையின் பேரில் மட்டுமே குடியரசு தலைவர் நீதிபதிகளை நியமிக்கிறார். அதே நேரத்தில், நீதிபதிகளை அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கும் உரிமையும் குடியரசு தலைவருக்கு உண்டு.
குடியரசு தலைவர் அதிகாரங்கள் என்ன?
எந்தவொரு வழக்கிலும் சட்ட அல்லது உண்மை சார்ந்த கேள்விகள் எழுந்தால், இந்த விஷயத்தில் ஆலோசனை வழங்க நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் உத்தரவிடலாம். அதே நேரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையில் குடியரசு தலைவர் மட்டுமே மன்னிப்பு வழங்க முடியும். உச்ச நீதிமன்றம் நாட்டின் குடியரசு தலைவருக்கு ஆலோசனை வழங்க முடியும், ஆனால் குடியரசு தலைவர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. குடியரசு தலைவருக்கு பாக்கெட் வீட்டோ (மறுப்பாணை) மற்றும் ஒரு மசோதாவை திருப்பி அனுப்பும் அதிகாரத்தைத் தவிர, அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின்படி தவிர, வேறு எந்த அதிகாரங்களையும் அவர் பயன்படுத்த முடியும்.
உச்சநீதிமன்றத்தின் அதிகாரங்கள்:
குடியரசு தலைவரை காட்டிலும் உச்சநீதிமன்றம் தான் அதிகாரமிக்கது எனவும் ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். காரணம், இந்தியாவில் நடப்பது சட்டத்தின் ஆட்சியே அன்றி நிர்வாகத்தின் ஆட்சி கிடையாது என்பதால் ஆகும். அதோடு, அரசமைப்பின் பாதுகாவலனாகவே உச்சநீதிமன்றம் தான் திகழ்கிறது. குடியரசு தலைவரால் எந்தவொரு சட்டத்தையும் சுயமாக அமல்படுத்த முடியாது. ஆனால், உச்சநீதிமன்றத்தால் அதனை செய்ய முடியும். அந்த அதிகாரத்தை அரசியலமைப்பு பிரிவு 142 வழங்குகிறது. மத்திய மற்றும் மாநில அமைச்சரவை முடிவுகளுக்கு கட்டுப்பட்டே செயல்படுவதால், குடியரசு தலைவர் மற்றும் ஆளுநர் பதவிகள் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் பதவிகள் மட்டுமே என்று விமர்சிக்கப்படுவதும் உண்டு.
மூன்று பதவிகளையும் வகித்த ஹிதயத்துல்லா
குடியரசுத் தலைவர் வெளிநாடு போனாலோ, மனநலம் பாதிக்கப்பட்டாலோ, இறந்தே போனாலோ துணைக் குடியரசுத் தலைவர் அந்தப் பதவிக்கு வருவார். துணைக் குடியரசுத் தலைவரும் அப்படி இல்லாது போனால் நாட்டின் குடியரசுத் தலைவராக உச்சநீதிமன்ற நீதிபதியே தானாகச் செயல்படுவார். அதாவது அவரை யாரும் பொறுப்பு ஏற்கச் சொல்வதில்லை. அவராகவே அப்பொறுப்பை எடுத்துக் கொள்வார். அதற்கான முன்னுதாரணமாக இருந்தவர்தான். முகமது ஹிதயத்துல்லா. பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு அவர் துணைக்குடியரசு தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் இந்திய தலைமை நீதிபதி, இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் ஆகிய மூன்று பதவிகளிலும் பணியாற்றிய ஒரே நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.





















