"எந்த நாகரிக சமூகமும் இதை ஏத்துக்காது" கொல்கத்தா சம்பவம் குறித்து மனம் நொந்து பேசிய குடியரசு தலைவர்!
கொல்கத்தா மருத்துவர் சம்பவம் குறித்து வேதனையாக பேசியுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கூட்டு மறதியால் இந்தியா சமூகம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.
தங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகள், இத்தகைய கொடுமைகளுக்கு ஆளாவதை எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது என கொல்கத்தா மருத்துவர் சம்பவம் குறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வேதனை தெரிவித்துள்ளார்.
நாட்டை உலுக்கிய கொல்கத்தா சம்பவம்: மேற்குவங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து முதல்முறையாக பேசியுள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. "இந்த கொடூரமான செயல்களின் மூல காரணங்களை சரி செய்ய நம் சமூகத்தில் நேர்மையான, பாரபட்சமற்ற சுயபரிசோதனை நடக்க வேண்டும்" என்றார்.
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய குடியரசு தலைவர், "மிகவும் வேதனையாக உள்ளது. இனியும் இதை ஏற்று கொள்ள முடியாது. இவற்றை தடுத்து நிறுத்த வேண்டும். நீண்டகாலமாக பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை சம்பவங்களை தடுக்க வேண்டும்.
"கூட்டு மறதியால் பாதிக்கப்பட்ட இந்திய சமூகம்"
மாணவர்கள், மருத்துவர்கள், மக்கள் என அனைவரும் கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், குற்றவாளிகள் எங்கேயோ அலைந்து திரிந்து வருகின்றனர். தங்கள் மகள்கள் மற்றும் சகோதரிகளுக்கு, இத்தகைய கொடுமைகள் நடப்பதை எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது.
குறைந்த சக்தி படைத்தவர்கள், குறைந்த திறன் உள்ளவர்கள், குறைந்த அறிவாற்றல் கொண்டவர்கள் என பெண்களை தாழ்வானவர்களாக பார்ப்பது இழிவான போக்கு. 2012 ஆம் ஆண்டு நிர்பயா வழக்குக்குப் பிறகு பல ஆண்டுகளாக இந்திய சமூகம் கூட்டு மறதியால் பாதிக்கப்பட்டுள்ளது. அருவருப்பாக இருக்கிறது. இந்த வக்கிரத்தை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த சரியான முறையில் கையாள்வோம்" என்றார்.
கொல்கத்தா மருத்துவர் வழக்கை கண்டித்து நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி பெண்கள் போராடி வருகின்றனர். மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பிறகே, சில மாநிலங்களில் பணிக்கு திரும்ப மருத்துவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க: 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்.. இளைஞர்களே நோட் பண்ணுங்க.. மோடி அரசின் செம்ம சர்ப்ரைஸ்!