(Source: ECI/ABP News/ABP Majha)
New Electricity rules: மக்களுக்கு விழுந்த பேரிடி.. 25% உயரும் மின்சார கட்டணம்...மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு..!
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா பெருந்தொற்று, பொருளாதார மந்த நிலையால் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன.
தற்போதைய சூழலில், மின்சாரம் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. வீடுகள் தொடங்கி தொழிற்சாலைகள் வரையில், அதன் தேவை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இப்படிப்பட்ட அத்தியாவசியத்தின் விலையை ஏற்றி மக்களை இன்னலுக்கு உள்ளாக்குவதற்கு எதிராக பல்வேறு தரப்பினர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இருந்த போதிலும், சீர் செய்வதாகக் கூறி, மின் கட்டணத்தை உயர்த்தும் போக்கு தொடர்ந்து வருகிறது.
தொடர்ந்து உயர்த்தப்படும் மின் கட்டணம்:
தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்திற்கான நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணின் அடிப்படையில் வரும் 2022-23 முதல் 2026-27 வரையிலான ஐந்தாண்டு காலத்திற்கு ஆண்டுக்கு ஒரு முறை மின் கட்டணம் உயர்த்தப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்த, உடனேயே தமிழ்நாடு அரசிடமிருந்து விளக்கம் வந்தது. இந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் வீட்டு உபயோக மின் கட்டணம் உயர்த்தப்படாது என்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சார கட்டணம் மட்டுமே உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பண மதிப்பிழப்பு நடவடிக்கை, கொரோனா பெருந்தொற்று, பொருளாதார மந்த நிலையால் தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதை தொடர்ந்து, மாநில அரசு அறிவித்த மின் கட்டண உயர்வு வணிகர்களை பெரும் சிரமத்தில் ஆழ்த்தியது.
மக்களுக்கு விழுந்த பேரிடி:
இச்சூழலில், மத்திய அரசின் நடவடிக்கை வணிகர்களுக்கு மட்டும் இன்றி மக்களுக்கும் பேரிடியாக அமைந்துள்ளது. வழக்கமாக, ஒரு நாளின் எல்லா நேரங்களிலும் ஒரே விகிதத்தில்தான் மின்சாரத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், மின்சாரம் தொடர்பான சட்டம் ஒன்றில் மத்திய அரசு திருத்தம் செய்திருப்பதன் மூலம் அதில் மாறுபாடு ஏற்பட உள்ளது. மின்சார(நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020இல் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டதன் மூலம் மின்சாரத்திற்கு செலுத்தும் கட்டணம், நாளின் நேரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
அதன்படி, மின்சாரத்திற்கான அதிக தேவை இருக்கும் நேரங்களில் (Peak Hours – உதாரணமாக, காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 முதல் இரவு 10 மணி வரை) மின் கட்டணம் வழக்கத்தை விட 10 முதல் 20 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்படும்.
அதே சமயம், சூரியஒளி கிடைக்கும் சாதாரண நேரங்களில் (solar Hours) தற்போது வசூலிக்கப்படும் சாதாரண கட்டணத்தை விட 10% -20% குறைவாக வசூலிக்கப்படும். இந்த சூரியஒளி கிடைக்கக் கூடிய நேரங்கள் எது என்பதை அந்தந்த மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையம் தங்களது புவியியல் அமைப்புக்கு ஏற்ப தீர்மானித்து கொள்ளும்.
2024 ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு இந்த புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வருகிறது. 2025 ஏப்ரல் 1 முதல் விவசாய நுகர்வோர் தவிர மற்ற அனைத்து நுகர்வோருக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட உடனேயே, ஸ்மார்ட் மீட்டர் நுகர்வோருக்கு இந்த கட்டணம் அமலுக்கு வந்துவிடும்.
25% உயரும் மின்சார கட்டணம்:
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே பெரிய வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு TOD கட்டணங்கள் நடைமுறையில் உள்ளன. ஸ்மார்ட் மீட்டர்களை நிறுவுவதன் மூலம், அனைத்து நுகர்வோர் மட்டத்தில் இந்த புதிய கட்டணம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்படைய உள்ளனர்.
எப்படி தெரியுமா? வீடுகளின் மொத்த மின்சாரப் பயன்பாட்டில் 70%, காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலுமான 10 மணி நேரத்தில் தான் நடைபெறுகிறது. அதிக மின்சார பயன்பாடு இல்லாத நேரமான இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான 7 மணி நேரத்தில் 10% -&15% மின்சாரம் கூட பயன்படுத்தப்படுவதில்லை.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில் வழக்கமான மின்சாரக் கட்டணம் தான் வசூலிக்கப்படும். 10 விழுக்காடு மின்சாரப் பயன்பாட்டுக்கு 5% கட்டண சலுகை வழங்கிவிட்டு, 70% மின்சாரப் பயன்பாட்டுக்கு 25% கூடுதல் கட்டணம் வசூலிப்பது மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 25% உயர்த்துவதாகவே பொருளாகும்.
எனவே, இந்த சட்டதிருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மக்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.