தேதி குறிச்சாச்சு! அடுத்தாண்டு தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. தமிழ்நாட்டில் எப்போ?
தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களுக்கு வரும் 2027ஆம் ஆண்டு, மார்ச் 1ஆம் தேதி முதல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முறை, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் எடுக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு:
இந்த நிலையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லடாக், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களுக்கும் இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பனிப் பிரதேச மாநிலங்களுக்கும் முதல் கட்டமாக அடுத்தாண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு உள்பட மற்ற மாநிலங்களுக்கு வரும் 2027ஆம் ஆண்டு, மார்ச் 1ஆம் தேதி முதல் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் எடுக்கப்பட்ட விவரங்கள் 2030ஆம் ஆண்டு வாக்கில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பும் அதன் பிறகு, மகளிர் இடஒதுக்கீடு சட்டமும் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி அரசு எடுத்த பிரம்மாஸ்திரம்:
கடந்த மக்களவை தேர்தலில், சாதிவாரி கணக்கெடுப்பை மையப்படுத்தி ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் செய்தார். அது, காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவில் பலன் தந்தது. 99 தொகுதிகளில் வென்று பலமான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.
எந்த சாதி அதிகம் உள்ளது, அதன் சமூக, பொருளாதார நிலை எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ள சாதிவாரி கணக்கெடுப்பு உதவுகிறது. தேசிய அளவில் எடுக்கப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தவிர பல மாநிலங்களில் சாதிவாரி ஆய்வு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, பீகாரில் ஏற்கனவே சாதிவாரி ஆய்வு எடுக்கப்பட்டுவிட்ட நிலையில், தெலங்கானாவில் சாதிவாரி ஆய்வை நடத்த காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் இந்தாண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப்படும் என மோடி தலைமையிலான அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது.
இதையும் படிக்க: JEE advanced: போலி பெருமித திமுக அரசு; தமிழ்நாடு கடைசியில் இருந்து மூன்றாம் இடம்- அன்புமணி விளாசல்!




















