Pocso : குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடந்தால்... அதிரடி கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம்..
குழந்தைகளை பாலியல் கொடுமைக்குள்ளாக்குவது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை தெரிவித்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் சமூகத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
இதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதற்கு இணையாக, நீதித்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குவது குறித்து டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை தெரிவித்துள்ளது.
பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம், 2012 பிரிவு 12 இன் கீழ் குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்துவது பிணையில் வெளியே வர முடியாத மிக தீவிரமான குற்றச் செயல் ஆகும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, சுப்பிரமணியன் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, "குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அட்டவணை I பகுதி II இரண்டாம் வகையின் கீழ் இக்குற்றம் அடங்கும்.
மூன்று ஆண்டு முதல் 7 ஆண்டுக்குள் சிறை தண்டனை விதிக்கப்படும் குற்றமாக இருந்தால், அது மிக தீவிரமான குற்ற செயலுக்குள் வருகிறது. எனவே, அதற்கு பிணை வழங்க முடியாது. அந்த வழக்கை மாஜிஸ்திரேட் பரிசீலனை எடுத்து கொள்ளலாம். பாலியல் துன்புறுத்தல் என்பது POCSO சட்டத்தின் 11வது பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் அட்டவணை I பகுதி II IIIஆம் வகைமையின் கீழ் வரும் குற்றத்தை போக்சோ சட்டப் பிரிவு 12இன் கீழ் பயன்படுத்தக் கோரிய பொது நல வழக்கில் நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
இந்த வகைமையின் கீழ்தான், மூன்று ஆண்டு முதல் 7 ஆண்டுக்குள் சிறை தண்டனை விதிக்கப்படும் குற்றமாக இருந்தால், அது மிக தீவிரமான குற்ற செயலாக கருதப்படுகிறது. இதன் கீழ் வரும் குற்றத்தில், பிணையில் வெளியே வர முடியாது.
கடந்த 2017ஆம் ஆண்டு, வழக்கறிஞர் ஆர்.கே. தருண், பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில், போக்சோ சட்டத்தின் 12வது பிரிவின் வகைப்பாட்டில் ஒரு தெளிவின்மை இருப்பதாக அவர் வாதிட்டார்.
இந்த விவகாரத்தில், போக்சோ சட்டப் பிரிவு 12இன் கீழ் தண்டிக்கப்படும் குற்றம் மிக தீவிரமான குற்ற செயலா? அதற்கு பிணை வழங்க முடியுமா அல்லது முடியாதா என கேள்வி எழுப்பப்பட்டது.
நவம்பர் 24 அன்று, உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு குறித்து வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற அமர்வுக்கு தெரிவிக்கப்பட்டது. அதில், பதிப்புரிமைச் சட்டத்தின் 63வது பிரிவின் கீழ் வரும் குற்றமானது மிக தீவிரமான குற்றச் செயலாகும். ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
பதிப்புரிமைச் சட்டத்தின் 63வது பிரிவின் கீழ் வரும் குற்றமானது ஜாமீனில் வெளவரக்கூடிய குற்றம் என டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதை மேற்கோள் காட்டிய டெல்லி உயர் நீதிமன்றம், அந்த தீர்ப்பு இதற்கும் பொருந்தும் எனக் கூறி "குழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்துவது பிணையில் வெளியே வர முடியாத மிக தீவிரமான குற்றச் செயல்" என தெரிவித்தது.