பழங்குடியினரின் வாக்குகளை குறிவைக்கும் பாஜக.. பிரதமர் மோடி போட்ட பக்கா ஸ்கெட்ச்
பழங்குடியினர் வாக்குகள் மீது தனது அடுத்து குறியை வைத்துள்ளது பாஜக.
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றிபெற்ற பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. ஒன்பதரை ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பாஜக, வரவிருக்கும் தேர்தலில் பல்வேறு சவால்களை சந்திக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
சவால்களை சந்திக்கும் பாஜக:
ஆட்சிக்கு எதிரான மனநிலை, தேசிய அளவில் புதிதாக உருவாகியுள்ள INDIA கூட்டணி, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பாஜகவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இந்த சவால்களை சமாளிக்கும் வகையில் பாஜக, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், தேர்தல் நெருங்கும் சூழலில், வரும் ஜனவரி மாதம் ராமர் கோயில் திறக்கவிருப்பது பாஜகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். அடுத்தப்படியாக, பெண்களை கவரும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடரில் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை பாஜக நிறைவேற்றியது.
இந்த நிலையில், பழங்குடியினர் வாக்குகள் மீது தனது அடுத்து குறியை வைத்துள்ளது பாஜக. அதற்காக, பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் உலிஹாது கிராமத்திற்கு பிரதமர் மோடி செல்ல உள்ளார். பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் மாதம் 15ஆம் தேதி அன்று, பிரதமர் மோடி அங்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார்.
பழங்குடியினரின் வாக்குகளை குறிவைக்கும் மோடி:
பிர்சா முண்டாவின் பிறந்த இடத்திற்கு செல்லும் முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற உள்ளார். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மோடி, பிர்சா முண்டாவின் குடும்பத்தினரை சந்தித்து பேச உள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடித் தலைவர் பிர்சா முண்டா. சுதந்திரப் போராட்ட வீரரான இவர், 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒரு பெரிய பழங்குடியினரின் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதை, முண்டா எழுச்சி என்றும் உல்குலன் என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
வரும் நவம்பர் மாதம் 17ஆம் தேதி, சத்தீஸ்கரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ள சூழலில், பிர்சா முண்டா பிறந்த ஊருக்கு பிரதமர் செல்லவிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. சத்தீஸ்கர் மக்கள் தொகையில் 30 சதவிகித்தினர் பழங்குடி மக்கள். அதேபோல, மத்திய பிரதேசத்தில் 21.1 சதவிகிதத்தினர் பழங்குடியினர்.