Karnataka Election : கர்நாடக தேர்தல்...ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் பாஜக...களத்தில் இறங்கும் பிரதமர் மோடி..!
வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி தேதியான வரும் ஏப்ரல் 24ஆம் தேதி, தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்குகிறார் மோடி.
கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள், வரும் மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
பிரதமர் மோடியின் செல்வாக்கு:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே, அரசியல் பரபரப்பு தொற்றி கொண்டது. கர்நாடகாவில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில், பிரதமர் மோடியின் செல்வாக்கை அதிகமாக நம்பியுள்ளது பாஜக.
இதன் காரணமாக, தேர்தலுக்கு முன்னதாக 20க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி. இவர் மட்டும் இன்றி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை நட்சத்திர பிரச்சாரகர்களாக பாஜக களம் இறக்கியுள்ளது.
மாநில தலைமை விடுத்த கோரிக்கை:
முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் அதிக எண்ணிக்கையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என மாநில பாஜக தலைமை கேட்டு கொண்டுள்ளது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய கடைசி தேதியான வரும் ஏப்ரல் 24ஆம் தேதி, தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்குகிறார் மோடி.
அமித் ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோர் எப்போது தேர்தல் பிரச்சாரம் செய்ய போகின்றனர் என்பது இறுதி செய்யப்படவில்லை. மோடி, அமித் ஷா, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் 20 முதல் 25க்கும் மேற்பட்ட தேர்தல் பிரச்சாரங்களில் கலந்து கொள்ள உள்ளனர் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி, மோடி, கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். வரும் மே 8ஆம் தேதி வரை, அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார். பாஜக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி மே 4ஆம் தேதி உடுப்பி வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி நகரில் பிரமாண்ட விழா நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
உடுப்பியில் பிரதமர் மோடியுடன் யோகி ஆதித்யநாத் சேர்ந்து பிரச்சாரம் செய்கிறார். அதுமட்டும் இன்றி, இரு தலைவர்களும் பெலகாவி மற்றும் ஹுப்பள்ளி மாவட்டங்களில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். பெலகாவி மற்றும் ஹுப்பள்ளிக்கு திரும்புவதற்கு முன், பிரதமர் ஹாவேரி, பாகல்கோட், கொப்பல் மற்றும் பிற மாவட்டங்களில் பிரசாரம் செய்ய உள்ளார்.
பிரதமர் மோடியின் பிரச்சாரம் கல்யாண-கர்நாடகா மற்றும் கிட்டூர்-கர்நாடகா பகுதிகளில் அதிகம் நடத்தப்பட உள்ளது. உள்ளூர் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்காக மோடி அங்கு பிரச்சாரம் செய்ய உள்ளார்.
தேசிய அரங்கில் பாஜகவின் முக்கிய முகம்களில் ஒருவராக வளர்ந்து வரும் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார். இதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் கலந்து கொள்ள உள்ளார்.