(Source: ECI/ABP News/ABP Majha)
Cabinet Reshuffle: மத்திய அமைச்சரவையில் மாற்றம்? இன்று முக்கிய முடிவு எடுக்கப்போகும் பிரதமர் மோடி!
ஆளும் பாஜகவின் உயர்மட்ட தலைவர்களின் கூட்டத் தொடரை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.
ஆளும் பாஜகவின் உயர்மட்ட தலைவர்களின் கூட்டத் தொடரை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றமும், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவையில் மாற்றம் ஏன்..?
இந்த ஆண்டு இறுதியில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனை தொடர்ந்து, அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுக்காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து மிக தீவிரமாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தேர்தல்களை கருத்தில்கொண்டு மத்திய அமைச்சரவை மற்றும் மத்திய - மாநில கட்சிகளிலும் சில மாற்றங்களை செய்ய முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
ஷாக் கொடுத்த அஜித்பவார்:
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அமைச்சரவை மாற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. முன்னதாக, தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியானது.
அதற்கு ஏற்றாற்போல், மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த அஜித் பவார், தனது ஆதரவு 30 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுடன் இணைந்து மாநில துணை முதலமைச்சராக பதவி ஏற்றார். ஏற்கனவே மகாராஷ்டிராவில் தேவேந்திரபட்னாவிஸ் துணை முதலமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிடத்தக்க வகையில் பெரிய அளவிலான எந்தவொரு மாற்றமும் நிகழவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ அரசியல் காரணங்களால் அந்த துறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, புவி அறிவியல் துறை வழங்கப்பட்டது.
இணை அமைச்சராக இருந்த அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு, சட்டத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்தநிலையில், அஜித் பவாரின் அணியை சேர்ந்த பிரஃபுல் படேலுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. அதற்காகவும் இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.