Independence Day: 78வது சுதந்திர தினம்! 11வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி - நாடே விழாக்கோலம்
நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார். நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டம் களைகட்டி காணப்படுகிறது.
இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியில் இருந்து ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களின் உயிர் தியாகங்களுக்கு பிறகு இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றது.
11வது முறையாக தேசிய கொடி ஏற்றிய பிரதமர்:
அந்த திருநாளை ஒவ்வொரு ஆண்டும் நாம் சுதந்திர நாளாக கொண்டாடி வருகிறோம். நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒட்டுமொத்த இந்திய தேசமும் விழாக்கோலம் பூண்டுள்ளது. டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். 11வது முறையாக தேசிய கொடியை செங்கோட்டையில் மோடி ஏற்றியுள்ளார்.
செங்கோட்டையில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்களும், முக்கிய அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பங்கேற்றுள்ளனர். செங்கோட்டையில் நாட்டின் வலிமையை பறைசாற்றும் விதமாக முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.
முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு:
ராணுவம், விமானப்படை மற்றும் கப்பல்படையினர் தங்களது அணிவகுப்பை பிரம்மாண்டமாக நடத்தி வருகின்றனர். வானத்தில் இருந்து முப்படைகளின் விமானங்கள் நாட்டின் மூவர்ண கொடி நிறத்தில் பூக்களையும், வர்ணங்களையும் தூவினர். சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, செங்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ராணுவத்தினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 6 ஆயிரம் பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 3 ஆயிரம் பேரும் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் விதமாக 2 ஆயிரம் பேர் அவரவர் மாநிலத்தின் பாரம்பரிய உடைகளில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 23 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மழை லேசாக பெய்து வருகிறது.
கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர்:
தமிழ்நாட்டில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இதையடுத்து, அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான கல்பனா சாவ்லா விருதை வயநாட்டில் உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர் சபீனாவுக்கு முதலமைச்சர் வழங்குகிறார். தமிழ்நாடு போலீசின் அணிவகுப்புடன், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.