PM Modi Speech: ” காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏழைகளின் வாழ்க்கை ஒரு பொருட்டல்ல" பிரதமர் மோடி குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை காங்கிரஸ் கட்சி அழுத்தத்தின் பேரில் ஆதரித்ததாக, பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் பாஜக தொண்டர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பெண்களை பிரிக்க முயற்சிக்கும் காங்கிரஸ்:
அதன்படி, “காங்கிரஸ் கட்சி பெண்களுக்காக உழைக்கவில்லை. அவர்கள் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்திருக்க வேண்டியதில்லை. பெண்கள் இடஒதுக்கீட்டில் ஓபிசி உள்இடஒதுக்கீடு வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைப்பதன் மூலம், நாட்டின் பெண்களை பிரிக்க அந்த கட்சி முயற்சிக்கிறது. காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் கட்டாயத்தின் பேரில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தன. பெண்களின் சக்தியைக் கண்டு காங்கிரஸ் பயப்படுகிறது.
மகளிர் இடஒதுக்கீடு - புதிய சரித்திரம்:
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டில் ஒரு புதிய சரித்திரம் படைத்துள்ளது. நாட்டுப் பெண்கள் பல தசாப்தங்களாக இதற்காக காத்திருந்தார்கள், அதைச் செய்யவே முடியாது என்றும் கூறப்பட்டது. ஆனால், எங்களால் வழங்கப்பட்ட ஒவ்வொரு உத்தரவாதமும் நிறைவேற்றப்படும். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த மசோதாவை அரை மனதுடனும், தயக்கத்துடனுமே ஆதரித்தன.
குடியரசு தலைவரை அவமானப்படுத்திய கட்சிகள்:
நாட்டின் முதல் பழங்குடிப் பெண் குடியரசு தலைவரான திரவுபதி முர்முவை, குடியரசு தலைவர் ஆவதைத் தடுக்க தங்களால் இயன்றவரை முயற்சித்தவர்கள் தான் இவர்கள். பலமுறை அவரை அவமானப்படுத்த முயற்சித்த இவர்கள் தான், நாட்டின் ஆயுதப் படைகளின் முன் வரிசையில் பெண்கள் நுழைவதைத் தடுத்து நிறுத்தியவர்கள்.
VIDEO | "Nari Shati Vandan Adhiniyam' (Women's Reservation Bill) created a new history in the country. Women of the country waited for several decades, and it was also said that it might never be done. But there is guarantee for every every guarantee getting fulfilled when there… pic.twitter.com/YA63BHeKYW
— Press Trust of India (@PTI_News) September 25, 2023
”சேரிகள் சுற்றுலா தளங்கள் போன்றது”
காங்கிரஸைப் பொறுத்தவரை, சேரிகள் என்பவை வீடியோ எடுக்கும் இடம் மற்றும் சாகச சுற்றுலாவுக்கான இடங்கள் தான். காங்கிரஸால் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியவில்லை. மத்தியபிரதேச மாநிலம் எதிர்கொண்ட ஒவ்வொரு பிரச்சனைக்கும் காங்கிரஸ் தான் காரணம். செல்வந்தர்களாக பிறந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு ஏழைகளின் வாழ்க்கை ஒரு பொருட்டல்ல. அவர்களுக்கு ஏழைகளின் வாழ்க்கை சாகசச் சுற்றுலாதான். இதைத்தான் அவர்கள் கடந்த காலத்திலும் செய்தார்கள். பாஜக அரசு, நாட்டின் வளர்ச்சியடைந்த மற்றும் மகத்தான முகத்தை உலகுக்குக் காட்டுகிறது” என பிரதமர் மோடி பேசினார். நடப்பாண்டு இறுதியில் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு சென்றுள்ள பிரதமர் மோடி காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.