"உலகில் எந்த மூலையில் இருந்தாலும் விட மாட்டேன்" தீவிரவாதிகளுக்கு மோடி கொடுத்த வார்னிங்
உலக நாடுகள் மத்தியில் பஹல்காம் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தீவிரவாதிகளை தேடி கண்டுபிடிப்போம் என்றும் ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதை முழு உலகத்திற்கும் சொல்லி கொள்கிறேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக நாடுகள் மத்தியில் பஹல்காம் தாக்குதல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த சூழலில், தாக்குதல் நடந்த பிறகு முதல்முறையாக மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.
தீவிரவாதிகளுக்கு எதிராக கொதித்த மோடி:
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் உயிரிழந்தனர். இதில், பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. அமெரிக்கா, சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள், இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கின்றன. இந்த விவகாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இந்தியா.
இந்த நிலையில், பிகாரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், "பிகார் மண்ணிலிருந்து உலகிற்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் அடையாளம் கண்டு தண்டனை வழங்கப்படும்.
"நினைத்து பார்க்க முடியாத தண்டனை"
பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா நம்புகிறது. உலகில் எங்கிருந்தாலும் அவர்களை தேடி கண்டுபிடிப்போம். இந்தியாவின் நம்பிக்கையை ஒருபோதும் உடைக்க முடியாது. பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் போகாது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முழு தேசமும் இதில் உறுதியாக உள்ளது, மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் உள்ளனர்.
நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். மிகத் தெளிவான வார்த்தைகளில் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பயங்கரவாதிகளும் இந்தத் தாக்குதலுக்கு சதி செய்தவர்களும், அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பெரிய தண்டனையைப் பெறுவார்கள்" என்றார்.
நிகழ்ச்சியில் முதலில் இந்தியில் பேசிக் கொண்டிருந்த பிரதமர் மோடி, உலகிற்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன் என உரையை தொடர்ந்த பிறகு ஆங்கிலத்தில் தனது உரையை நிகழ்த்தினார். இதன் மூலம், பயங்கரவாதிகளுக்கு எதிரான தனது நிலைபாட்டை உலக நாடுகளுக்கு நேரடியாக சொல்லி இருக்கிறார் பிரதமர் மோடி.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

