காஷ்மீர் டூ கன்னியாகுமரி.. இனிமே ரயிலில் சாத்தியம்.. செம்ம மேட்டர் சொன்ன பிரதமர் மோடி
"'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை' என்று கூறி, பாரத அன்னையை நாங்கள் எப்போதும் ஆழ்ந்த பயபக்தியுடன் வணங்கி வருகிறோம். இன்று, நமது இந்திய ரயில்வே மூலம் ஒரு யதார்த்தமாகி இருக்கிறது"

ஒட்டு மொத்த இந்தியாவை இணைப்பதில் செனாப் ரயில் பாலம் புதிய மைல்கல் படைத்துள்ளதாகவும் காஷ்மீர் டூ கன்னியாகுமரி என்ற வார்த்தை பதம் தற்போது இந்திய ரயில்வே மூலம் சாத்தியமாகி உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் டூ கன்னியாகுமரி:
ஜம்மு காஷ்மீருக்கு இன்று பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, உலகின் உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தையும் பின்னர், அஞ்சி பாலத்தையும் திறந்து வைத்தார். பின்னர் பேசிய பிரதமர், "இன்று செனாப் மற்றும் அஞ்சி பாலங்களில் நடந்து செல்லும்போது, இந்தியாவின் அபிலாஷைகளையும், நமது பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் திறமை மற்றும் தைரியத்தையும் நான் உணர்ந்தேன்.
'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை' என்று கூறி, பாரத அன்னையை நாங்கள் எப்போதும் ஆழ்ந்த பயபக்தியுடன் வணங்கி வருகிறோம். இன்று, நமது இந்திய ரயில்வே மூலம் ஒரு யதார்த்தமாகி இருக்கிறது. பிரான்சில் ஈபிள் கோபுரத்தைப் பார்க்க மக்கள் வருகிறார்கள். இந்தப் பாலம் அதை விட உயரமானது. இந்தப் பாலம் காஷ்மீரைப் பார்வையிட உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், அது ஒரு சுற்றுலாத் தலமாகவும் மாறும்.
ஜம்மு-காஷ்மீரின் செழிப்புக்கான நுழைவாயில்களாக செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் செயல்படும். பிர் பஞ்சலின் செல்ல முடியாத மலைகளில் இந்தியாவின் சக்தியின் உயிருள்ள சின்னமாக செனாப் மற்றும் அஞ்சி பாலங்கள் உள்ளன. இது, இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் கர்ஜனை. காஷ்மீரின் ஆப்பிள்கள் நாட்டின் பெரிய சந்தைகளுக்கு குறைந்த விலையிலும் சரியான நேரத்திலும் சென்றடைய முடியும்.
செம்ம மேட்டர் சொன்ன பிரதமர் மோடி:
பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி நிற்காது. இது, மோடியின் வாக்குறுதி. வளர்ச்சியை நிறுத்த நான் விடமாட்டேன். இளைஞர்கள் தங்கள் கனவுகளை அடைவதை எந்தத் தடையும் தடுக்க முடியாது. எந்தவொரு தடையும் முதலில் நரேந்திர மோடியை எதிர்கொள்ள வேண்டும்.
நமது அண்டை நாடு மனிதகுலத்திற்கு மட்டுமல்ல, சுற்றுலாவிற்கும் எதிரானது. அது ஏழைகளின் வாழ்வாதாரத்திற்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பஹல்காம் தாக்குதல் இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு.
இது 'இன்சானியத் (மனிதநேயம்) மற்றும் காஷ்மீரியத்' மீதான தாக்குதல். இது, இந்தியாவில் கலவரங்களைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டது. அதனால்தான் அவர்கள் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்தனர்" என்றார்.
ஆற்றிலிருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கட்டிடக்கலையின் அற்புதமான செனாப் ரயில் பாலம், உலகின் மிக உயரமான ரயில்வே எஃகு வளைவுப் பாலமாகும். இதன் நீளம் 1,315 மீட்டர். இது, நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு, ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும். பாலத்தில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் மூலம், கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே பயணிக்க சுமார் 3 மணிநேரம் மட்டுமே ஆகும். இதனால் தற்போதுள்ள பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் வரை குறையும். அஞ்சி பாலம் நாட்டின் முதலாவது கம்பிவழி ரயில் பாலமாகும். இது சவாலான சூழலில் நாட்டிற்கு பயன்பட உள்ளது.





















