"அரசுடன் போட்டி போட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" தொழில்துறைக்கு பிரதமர் வேண்டுகோள்!
அரசாங்கத்துடன் போட்டி போட்டு வேலை வாய்ப்புகளையும் முதலீடுகளையும் உருவாக்க வேண்டும் என தொழில்துறை மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
உலகளவில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையையும் அதிலிருந்து வேறுபட்டு இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, "உலக நாடுகளுக்கே இந்தியாவின் நிதி நிர்வாகம் எடுத்துக்காட்டாக உள்ளது" என்றார்.
"ஏற்றுமதியில் அதிகரித்து வரும் இந்தியாவின் பங்களிப்பு" டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இந்திய தொழில் கூட்டமைப்பின் (CII) சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு தொடக்க உரையாற்றிய பிரதமர், "உலகளாவிய குறைவான வளர்ச்சி, அதிக பணவீக்கத்திற்கு மத்தியில் இந்தியா அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. குறைந்த பணவீக்கத்தை மட்டுமே சந்தித்துள்ளோம்.
தொற்றுநோய்க்கு மத்தியிலும் இந்தியாவின் நிதி நிர்வாகம் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது. உலகளாவிய பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு இன்று 16 சதவீதத்தை எட்டியுள்ளது" என்றார்.
"அரசாங்கத்துடன் போட்டி போட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" மேக் இன் இந்தியா, பல்வேறு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை எளிமைப்படுத்தியது, பல்நோக்கு தளவாட பூங்காக்கள், 14 துறைகளுக்கான மானியம் ஆகியவற்றை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, "நாட்டின் 100 மாவட்டங்களுக்கு புதுமையான முதலீட்டு திட்டங்களையும் முதலீட்டு பூங்காக்களையும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். இந்த 100 நகரங்கள், வளர்ந்த பாரதத்தின் புதிய மையங்களாக மாறும்.
அணு மின் உற்பத்திக்கான அதிக ஒதுக்கீடு, விவசாயத்திற்கான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, விவசாயிகளின் நிலங்களுக்கு எண் வழங்குவதற்கான பு-ஆதார் அட்டை, விண்வெளித்துறைக்கு 1000 கோடி ரூபாய் மூலதன நிதி, முக்கியமான கனிம திட்டங்கள் ஆகியவை முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கும்.
வேலை வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளை உருவாக்குவதில் அரசாங்கத்துடன் போட்டி போடுமாறு தொழில்துறையினரை கேட்டுக் கொள்கிறேன். வளர்ந்த பாரதத்தை உங்கள் குறிக்கோளாகக் கொண்டு அதை நோக்கிச் செயல்படுங்கள்" என்றார்.
தொழில்துறையினர், அரசாங்க அதிகாரிகள், தூதர்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மாநாட்டில் நேரில் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழில் கூட்டமைப்பை சேர்ந்தவர்களுக்கும் மாநாட்டில் பங்கேற்றனர்.