"வீட்டைப் பெறும்போதுதான் சுயமரியாதை உயர்கிறது" எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி!
நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், பின்தங்கியவர்கள், பழங்குடி குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, அவற்றை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் பேசிய பிரதமர், "நவீன வசதிகளும் வளர்ச்சியும் நாட்டின் ஒரு சில நகரங்களில் மட்டுமே இருந்த காலம் இருந்தது.
"ஏழைகளுக்கே முன்னுரிமை"
ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்கள் நவீன உள்கட்டமைப்பு வளர்ச்சியில் பின்தங்கின. இருப்பினும், 'அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற தாரக மந்திரம் நாட்டின் மனநிலையையும் முன்னுரிமைகளை மாற்றியுள்ளது.
இப்போது, நாட்டின் முன்னுரிமை ஏழைகளுக்குத்தான். தற்போது நாட்டின் முன்னுரிமை பழங்குடியின சமூகங்களுக்குத்தான். இப்போது, நாட்டின் முன்னுரிமை தலித்துகள், பின்தங்கியவர்கள், சமூகத்தின் பின்தங்கிய பிரிவினருக்குத் தான்.
இப்போது, நாட்டின் முன்னுரிமை பெண்கள், இளைஞர்கள் விவசாயிகள் ஆகியோருக்குத் தான். அதனால்தான், ஜார்க்கண்ட், மற்ற மாநிலங்களைப் போலவே, வந்தே பாரத் போன்ற உயர் தொழில்நுட்ப ரயில்களையும் நவீன உள்கட்டமைப்பையும் பெறுகிறது.
இன்று, ஒவ்வொரு மாநிலமும் நகரமும் விரைவான வளர்ச்சிக்காக வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்களை விரும்புகின்றன. சில நாட்களுக்கு முன்பு, வடக்கு, தென் மாநிலங்களுக்கு 3 புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை நான் கொடியசைத்து தொடங்கி வைத்தேன்.
எமோஷனலாக பேசிய பிரதமர் மோடி:
இன்று, டாடா நகரிலிருந்து பாட்னா, டாடாநகர் முதல் பிரம்மபூர், ரூர்கேலாவிலா - டாடாநகர் - ஹவுரா, பாகல்பூர் - தும்கா - ஹவுரா, தியோகர் - கயா - வாரணாசி, கயா - கோடர்மா – பரஸ்நாத் – தன்பாத் - ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
வீடுகள் வழங்கும் திட்டத்தின்போதே, இந்த வந்தே பாரத் ரயில்களையும் நான் கொடியசைத்து தொடங்கி வைத்தேன். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் ரயில் இணைப்பின் விரிவாக்கம் இந்தப் பிராந்தியம் முழுவதின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்தும்.
இந்த ரயில்கள் வர்த்தகர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரிதும் பயனளிக்கும். இது இங்கு பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகளையும் துரிதப்படுத்தும். நாடு, உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காசிக்கு வருகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உறுதியான வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகளுடன், கழிப்பறைகள், தண்ணீர், மின்சாரம் மற்றும் எரிவாயு இணைப்புகள் போன்ற வசதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நாம் நினைவில் கொள்ள வேண்டியது. ஒரு குடும்பம் தனக்கென ஒரு வீட்டைப் பெறும்போது, அவர்களின் சுயமரியாதை உயர்கிறது.
2014 முதல், நாட்டில் உள்ள ஏழைகள், தலித்துகள், பின்தங்கியவர்கள், பழங்குடி குடும்பங்களுக்கு அதிகாரம் அளிக்க பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜார்க்கண்ட் உட்பட நாடு முழுவதும் உள்ள பழங்குடியின சகோதர சகோதரிகளுக்காக பிரதமரின் ஜன்மன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மிகவும் பின்தங்கிய பழங்குடியினரை சென்றடைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்" என்றார்.