Nalanda: புத்தகங்கள் நெருப்பில் கருகினாலும் அறிவை அழிக்க முடியாது”; நாளந்தா பல்கலை திறப்பு விழாவில் பிரதமர்
Nalanda University: புதிய நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்படுவது இந்தியாவின் பொற்காலம் மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறி என பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகமாக கருதப்படும், பீகாரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகம் மீண்டும் உருவாக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம், மாணவர்கள் தங்கிப் படிக்கும் உலகின் முதல் பல்கலைக்கழகமாக இருந்தது எனக் கருதப்படுகிறது. நாளந்தாவின் பழங்கால சிதைவு எச்சங்கள், 2016-ம் ஆண்டில் ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் மிக ஆழமான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுள்ளது.
நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகம்:
பீகார் மாநிலம் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (19.06.2024) தொடங்கி வைத்தார். இந்தியா மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டு நாடுகளின் கூட்டு முயற்சியாக இந்தப் பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழாவில் 17 நாடுகளின் தூதரகங்களின் பிரதிநிதிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற 10 நாட்களுக்குள் தாம் நாளந்தாவுக்கு வருகை தருவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு தற்போது சாதகமான அம்சங்கள் நிலவுகிறது. நாளந்தா என்பது ஒரு பெயர் மட்டுமல்ல. இது ஒரு அடையாளம், மரியாதை, அறிவின் வேர், தாரக மந்திரம்.
அறிவை அழிக்க முடியாது:
புத்தகங்கள் நெருப்பில் கருகினாலும் அறிவை அழிக்க முடியாது என்ற உண்மையை பறைசாற்றுவதே நாளந்தா பல்கலைக்கழகம் என்று பிரதமர் தெரிவித்தார். புதிய நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்படுவது இந்தியாவின் பொற்காலம் மீண்டும் தொடங்குவதற்கான அறிகுறி என்று அவர் எடுத்துரைத்தார்.
நாளந்தாவுக்குப் புத்துயிரூட்டுவது, இந்தியாவின் திறன்களை உலகிற்கு எடுத்துக் காட்டும். வலுவான மனித மாண்புகளைக் கொண்ட நாடுகள், வரலாற்றுக்குப் புத்துயிர் அளிப்பதன் மூலம் சிறந்த உலகை உருவாக்கும் திறன் கொண்டவையாக உள்ளன.
நாளந்தா பல்ககலைக்கழகம், பல்வேறு உலக நாடுகள் மற்றும் ஆசியாவின் பல நாடுகளின் பாரம்பரியத்தை சுமந்து நிற்கிறது. இப்பல்கலைக்கழகத்தின் மறுமலர்ச்சி இந்திய கலாச்சாரத்தின் மறுமலர்ச்சி மட்டுமல்லாமல், அறிவு உலகின் மறுமலர்ச்சி. நாளந்தா பல்கலைக்கழக வளாக திட்டத்தில் நட்பு நாடுகளின் பங்களிப்பை பாராட்டிய அவர், இன்றைய தொடக்க விழாவில் பல நாடுகள் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
”கல்வி என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது”
ஒரு காலத்தில் இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்தது என்று குறிப்பிட்ட பிரதமர், நாளந்தா என்றால் அறிவு மற்றும் கல்வியின் தொடர்ச்சி என்று பொருள்படும் எனக் கூறினார். கல்வி குறித்த இந்தியாவின் அணுகுமுறையும், சிந்தனையும் இதுவே என்றும் அவர் தெரிவித்தார்.
கல்வி என்பது எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. என்பதுடன் உயரிய மதிப்புகளையும், சிந்தனைகளையும் அது கற்பிக்கிறது. பழங்காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தில், மாணவர்கள் தேசங்களைப் பொருட்படுத்தாமல் அனுமதிக்கப்பட்டனர் . புதிதாக திறக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் அதே பண்டைய பாரம்பரியத்தை நவீன வடிவில் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தினார். நாளந்தா பல்கலைக்கழகத்தில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பயிலுவது குறித்து, மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், 'உலகம் ஒரே குடும்பம் (வசுதைவ குடும்பகம்) என்பதற்கு இது சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார்.
இந்தியாவின் முதன்மை கல்வி நிறுவனங்கள் உலக அளவில் பல நாடுகளில் தங்களது வளாகங்களை சமீபத்தில் நிறுவியதைக் குறிப்பிட்ட பிரதமர், நாளந்தா பல்கலைக்கழமும் இதே பணியைச் செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இந்திய இளைஞர்கள் மீது உலகத்தின் பார்வை பதிந்துள்ளது என்று கூறிய பிரதமர், இந்தியா புத்த பகவானின் நாடு என்றும், ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு உலகத்துடன் இணைந்து செயல்பட விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
நாளந்தா மாணவர்கள், இந்தியாவின் எதிர்காலம் என்று கூறிய பிரதமர், அமிர்த காலத்தின், அடுத்த 25 ஆண்டுகளில் இவர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்றார். நாளந்தாவின் மதிப்புகளை தங்களுடன் முன்னோக்கி எடுத்துச் செல்லுமாறு அதன் மாணவர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். ஆர்வத்துடனும், துணிச்சலுடனும் செயல்பட்டு சமூகத்தில் நேர்மறையான மாற்றத்திற்காக செயல்படுமாறு மாணவர்களைப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
நாளந்தாவின் அறிவு, மனிதகுலத்திற்கு வழிகாட்டியாக அமையும் என்றும், வரும் காலங்களில் இதன் இளைஞர்கள் உலகம் முழுமைக்கும் வழிகாட்டுவார்கள் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். நாளந்தா உலக நலனுக்கான முக்கிய மையமாக மாறும் என்று தாம் நம்புவதாகக் கூறி பிரதமர் நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.
வரலாற்று எச்சங்கள்:
நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்று எச்சங்களாக திகழும் பண்டைக்கால இடிபாடுகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது; "நாளந்தாவின் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்ட எச்சங்களைப் பார்வையிட்டது அற்புதமாக இருந்தது. பண்டைய உலகின் மிகப் பெரிய கல்வி நிறுவனமாக திகழ்ந்ததற்கு சான்றாக இது உள்ளது. இந்தத் தளம் ஒரு காலத்தில் இங்கு செழித்து வளர்ந்த அறிவார்ந்த கடந்த காலத்தைப் பற்றிய ஆழமான பார்வையை வழங்குகிறது. நாளந்தா ஒரு அறிவார்ந்த உணர்வை உருவாக்கியுள்ளது. அது நம் நாட்டில் தொடர்ந்து செழித்து வளர்கிறது.”
பின்னணி
நாளந்தா பல்கலைக்கழக வளாகத்தில் 40 வகுப்பறைகள் கொண்ட இரண்டு கல்வி வளாகங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1900 இருக்கைகள் உள்ளன. தலா 300 இருக்கைகள் கொண்ட இரண்டு கலையரங்கங்கள், சுமார் 550 மாணவர்கள் தங்கக்கூடிய ஒரு மாணவர் விடுதி மற்றும் ஒரு சர்வதேச மையம், 2000 நபர்கள் வரை பங்கேற்கக் கூடிய ஒரு அரங்கம், ஒரு ஆசிரிய மன்றம் மற்றும் ஒரு விளையாட்டு வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
இந்த வளாகம் ஒரு பசுமை வளாகமாகும். சூரிய மின்சக்தி அமைப்பு, கழிவுநீர் மறுசுழற்சி அமைப்பு, 100 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலை அமைப்புகள் மற்றும் பல சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்மைகளுடன் இந்த வளாகம் தனிச்சிறப்புடன் உள்ளது.