கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் : வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி இன்று வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அசாம், நாகலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகலாயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய மாநில முதல்-அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். இன்று காலை 11 மணியளவில் காணொலி காட்சி மூலமாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த வாரம் மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டிலே 66 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது. மிகவும் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இந்த 66 மாவட்டங்களில் 39 மாவட்டங்கள் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாவட்டங்கள் ஆகும்.
வடகிழக்கு மாநிலங்களிலே அருணாச்சல பிரதேசத்தில் 10 மாவட்டங்களில் அதிகப்படியாக கொரோனா பாதிப்பு உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 9 மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. மேகலாயாவில் 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. அசாம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் 4 மாவட்டங்களில் பாதிப்பு அதிகளவில் உள்ளது. திரிபுரா மாநிலத்தில் 3 மாவட்டங்களிலும், மிசோரம் மாநிலத்தில் 2 மாவட்டங்களிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. நாகலாந்து மாநிலத்தில் 1 மாவட்டத்தில் பிற மாவட்டங்களை காட்டிலும் அதிகளவில் பாதிப்பு உள்ளது, வடகிழக்கு மாநிலங்களில் மேற்கூறிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வீதம் 10 சதவீத்திற்கும் அதிகளவில் காணப்படுகிறது.
இந்த சூழலில், வடகிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனையில் கொரோனா தொற்று பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு நிலவரம், இரண்டாவது அலையின் பாதிப்புகள், மூன்றாவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தடுப்பூசி விவரம், தடுப்பூசி விழப்புணர்வு, தொற்று பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருப்பதற்கான காரணங்கள் ஆகியன குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சிறப்பு கவனம் கொண்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம் ஆகும். மேலும், வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கனவே கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ள ஊக்குவித்து வருகிறோம், அந்த மாநிலங்களில் கொரோனா பரிசோதனைகளும் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தது. மத்திய அரசின் சார்பில் அருணாச்சல பிரதேசம், திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு நிபுணர்கள் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
கடந்த வாரம் மத்திய அரசின் செயலாளர் ராஜீவ் கவுபா வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில், பிரதமர் மோடி இன்று வடகிழக்கு மாநில முதல்-அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.