மீண்டும் நம்பர் 1.. உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பைடன், ஸ்டார்மரை பின்னுக்கு தள்ளிய மோடி!
உலகின் பிரபலமான தலைவர்கள் லிஸ்டில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்தார். மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட கருத்துக்கணிப்பு அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டது.
உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 69 சதவிகித மக்களின் ஆதரவை பெற்று முதலிடத்தில் உள்ளார் மோடி.
உலக அளவில் தொடர்ந்து அசத்தும் பிரதமர் மோடி:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், புதிய பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட 25 உலக தலைவர்கள் அடங்கிய பட்டியலில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி உள்ளார் பிரதமர் மோடி.
இந்தாண்டு ஜூலை 8ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துக்கணிப்பு எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதை விவரித்த மார்னிங் கன்சல்ட் நிறுவனம், "ஒவ்வொரு நாட்டிலும் வயது வந்த குடிமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு நாட்டின் மாதிரி அளவும் வேறுபடுகிறது.
பைடன், ஸ்டார்மரை பின்னுக்கு தள்ளிய மோடி:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 39 சதவீத ஆதரவை பெற்ற நிலையில், பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் 45 சதவீத ஆதரவை பெற்றுள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 61 சதவீத ஆதரவை பெற்று இரண்டாவது இடத்தையும், அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலே 60 சதவீதத்தினரின் ஆதரவை பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து அதிபர் வயோலா அம்ஹெர்ட், 52 சதவிகித ஆதரவை பெற்று நான்காவது இடத்திலும், அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ், 47 சதவிகிதத்தினரின் ஆதரவை பெற்று ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.
இந்த பட்டியலில் 39 சதவீத ஆதரவை பெற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், 12ஆவது இடத்தில் உள்ளார். 29 சதவீத ஆதரவை பெற்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 20ஆவது இடத்தையும் இத்தாலியின் பிரதமராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீவிர வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனி, 40 சதவீத ஆதரவை பெற்று பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ளார்.
2022ஆம் ஆண்டு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். உக்ரைன் - ரஷ்ய போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், இது போருக்கான காலம் என பிரதமர் மோடி பேசியது அனைவரின் வரவேற்பையும் பெற்றிருந்தது.
உக்ரைன் - ரஷ்ய போர் மட்டும் இன்றி, இஸ்ரேல் - ஹமாஸ் போரும் உலகையே மூன்றாவது உலக போரின் விளம்பில் கொண்டு போய் நிற்க வைத்தது. இந்த சூழலில், பேச்சுவார்த்தையின் மூலமாக மட்டுமே பிரச்னையை தீர்க்க முடியும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் பிரதமர் மோடி.