PM CARES | பி.எம். கேர்ஸ் நிதி இந்திய அரசுக்கு சொந்தமானது இல்லை: மத்திய அரசு தெரிவித்தது என்ன?
பிரதமர் கேர்ஸ் நிதியை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியாது எனவும் எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பி.எம். கேர்ஸ் நிதி இந்திய அரசுக்கு சொந்தமானது இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமரின் கொரோனா நிவாரணம் வழங்கும் பி.எம்.கேர்ஸ் நிதியம் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிதியம் தொடங்கப்பட்டபோது பொதுமக்கள் முதல் பல்வேறு தரப்பினரும் அந்த நிதியத்திற்கு நிதி அனுப்பியிருந்தனர். இதையடுத்து பி.எம்.கேர்ஸ் நிதியத்தில் எதற்காக, எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது என்பது குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை என விமர்சனங்கள் எழுந்தன. அதேபோல, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தொகை குறித்த விவரங்களை அறிய முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது. மேலும் இந்த நிதியின் நோக்கங்கள் குறித்து எதிர்க்கட்சிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். தொடர்ந்து, இது தொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டன.
இதையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசு பிரதமரின் அவசர கால நிதியான பிஎம் கேர்ஸ், இந்திய அரசுக்கு சொந்தமான பொது நிதி அல்ல என்று தெரிவித்துள்ளது. சட்டப்படி பிரதமர் கேர்ஸ் நிதி ஒரு அறக்கட்டளையின் கீழ் செயல்படுவதாகவும் பிரதமர் அந்த அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ தலைவர் என்றும் மத்திய அமைச்சரவையில் உள்ள மூன்று அமைச்சர்கள் அதன் அறங்காவலர்கள் என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் கேர்ஸ் நிதியை ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கொண்டுவர முடியாது எனவும் எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பி.எம்.கேர்ஸின் நிதி, நிதி தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்படுவதாகவும், நிதி குறித்து நிதியம் வெளிப்படைத்தன்மையுடன்தான் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. நிதி குறித்த விவரங்கள் தேவையெனில் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு வரும் 27ம் தேதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் டி.என்.பட்டேல் மற்றும் அமித் பன்சால் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஏற்கெனவே பிஎம் கேர்ஸ் நிதியத்தின் கணக்குகளுக்கு மத்திய தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதனால், பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு வரும் நிதிகள் எப்படி செலவு செய்யப்படுகிறது என்ற தகவலை மக்கள் பெறுவதில் சிக்கல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது
இதையும் படிக்க,
ஒவ்வொரு வாக்கும் எனக்கு முக்கியம்!’ - இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உருக்கமாகப் பேசிய மம்தா பானர்ஜி!
Pegasus | பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைக்க முன்வந்த உச்சநீதிமன்றம்