(Source: ECI/ABP News/ABP Majha)
`ஒவ்வொரு வாக்கும் எனக்கு முக்கியம்!’ - இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் உருக்கமாகப் பேசிய மம்தா பானர்ஜி!
பாபனிபூர் இடைத்தேர்தலில் தான் வெற்றி பெறாவிட்டால், தனது கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவர் தான் மேற்கு வங்க முதல்வராகப் பதவியேற்பார் என்று மம்தா பானர்ஜி பிரசாரத்தில் பேசியுள்ளார்.
வரும் செப்டம்பர் 30 அன்று நடைபெறும் பாபனிபூர் இடைத்தேர்தலில் தான் வெற்றி பெறாவிட்டால், தனது கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவர் தான் மேற்கு வங்கத்தின் முதல்வராகப் பதவியேற்பார் என்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உருக்கமாகப் பேசியுள்ளார்.
`கொட்டும் மழையிலும் உங்கள் வாக்குகளைச் செலுத்துங்கள். ஒரு வாக்கு கிடைக்காமல் போனாலும், எனக்கு சிக்கல் வரும். நான் நிச்சயம் வெல்வேன் என்று யாரும் திருப்தியடைந்து விடாதீர்கள். என்னை உங்கள் முதலமைச்சராக காண வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்கள் வாக்குகளை எனக்குச் செலுத்துங்கள். ஒவ்வொரு வாக்கும் நமக்கு முக்கியம். நான் வெற்றி பெறாவிட்டால். நாம் பெரும்பான்மையாக இருப்பதால் நமது கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவர் உங்கள் முதல்வராகப் பதவியேற்பார்’ என்று தனது முதல் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உருக்கமாகப் பேசியுள்ளார் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி. தெற்கு கொல்கத்தாவில் உள்ள ஏக்பால்பூர் பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இடங்களில் பிரசாரம் செய்துள்ளார் மம்தா பானர்ஜி.
இந்தி, வங்காளம் ஆகிய மொழிகளுடன் உருது மொழி வார்த்தைகளைக் கலந்துபேசிய மம்தா பானர்ஜி, `நான் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டேன். எனினும் என்னை வீழ்த்த மிகப்பெரிய சதி நிகழ்ந்தது. இந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. என்னுடைய விதியின் பலனாக, பாபனிபூரில் வென்று முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ளேன்’ என்று மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு தேர்தல்களில், பாபனிபூர் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்தியுள்ளது. இந்தத் தொகுதியில் சுமார் 20 சதவிகித வாக்காளர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள். `ஏக்பால்பூரைச் சேர்ந்த கிட்டர்பூரின் வாக்காளர்கள் நான் போட்டியிட்ட 6 முறையும் என்னை ஆதரித்துள்ளதோடு, தெற்கு கொல்கத்தா மக்களவை தொகுதியை வெல்ல உதவி செய்தனர். இந்த முறையும் எனக்கு மக்கள் ஆதரவு கிடைக்கும் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார் மம்தா பானர்ஜி.
`பாரதிய ஜனதா கட்சி பொய்யர்களின் கூடாரம். வங்காள மக்கள் துர்கா பூஜை, காளி பூஜை ஆகிய விழாக்களைக் கொண்டாட அனுமதி மறுக்கப்படுவதாகப் பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் மத நம்பிக்கைகளைப் பின்பற்றும் சுதந்திரம் இங்கு இருக்கிறது. ஆனால், திரிபுரா அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. திரிபுரா மக்கள் எப்படி துர்கா பூஜை கொண்டாடுவார்கள்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்கத்தின் பாஜக தலைவர்கள் சுவேந்து அதிகாரி, சுகந்தா மஜூம்தார், மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வபன் தாஸ்குப்தா, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி முதலானோர் தேர்தல் பிரசாரத்தில் ஒரே நாளில் ஈடுபட்டுள்ள நிலையில், பாபனிபூர் இடைத்தேர்தல் களம் களைகட்டியுள்ளது.