காதல், போதைப்பொருள் ஜிஹாத் என்னும் பேச்சு.. பாதிரியாரைக் கண்டித்த கேரள முதல்வர்.. ஆதரித்த பாஜக
போதைபொருள் சார்ந்த பிரச்சினைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் பாதிப்பதில்லை, அது சமுதாயத்தையே பாதிக்கிறது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலத்தில் கிறிஸ்துவ பெண்கள், ‘காதல் மற்றும் போதைப்பொருள் ஜிஹாத்’ ஆகியவற்றுக்கு இரையாகி வருவதாக கத்தோலிக்க பாதிரியார் கருத்து தெரிவித்த நிலையில் அதனை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கண்டித்துள்ளார்.
கத்தோலிக்க பேராலயத்தின் பாதிரியார் ஜோசப் கல்லரங்கட் கடந்த வியாழக்கிழமை பேசுகையில், தீவிரவாதிகள் மற்ற மதங்களைச் சேர்ந்த இளைஞர்களை அழிக்க போதை பொருட்கள் ஜிஹாத் போன்ற முறைகளைப் பயன்படுத்துவதாகக் கூறினார். லவ் ஜிகாத் என்ற பெயரில் கிறிஸ்தவ பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மதமாற்றம் செய்து, அவர்களை தீவிரவாத செயல்களுக்காக பயன்படுத்தி வருவதாகவும் பாதிரியார் தெரிவித்தார். இதனையடுத்து, பாதிரியார் ஜோசப் கல்லரங்கட்டின் கருத்துக்கு எதிராக இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது போன்ற கருத்துகள் கேரள சமூகத்தில் வகுப்புவாத பிளவை உருவாக்கும் விதத்தில் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் பேசும்போது, பாதிரியார் செல்வாக்குமிக்க ஒரு மத அறிஞர், ‘நார்க்கோடிக் ( போதைப்பொருள்) ஜிஹாத்’ எனும் வார்த்தையையே இப்போதுதான் கேள்விப்படுகிறோம். போதைப்பொருள் சார்ந்த பிரச்சினைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும் பாதிப்பதில்லை, அது சமுதாயத்தையே பாதிக்கிறது. அது குறித்து எங்கள் அரசு அக்கறைக்கொண்டுள்ளது என குறிப்பிட்டார். மேலும், அதற்கெதிரான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். போதைப்பொருட்களுக்கு மதத்தின் நிறம் இல்லை, ஆனால் அதன் நிறம் சமூகத்திற்கே விரோதமானது. அவர் என்னவிதமான சூழலில் இதனை கூறினார் என புரியவில்லை. பொறுப்பான இடத்தில் இருக்கும் மனிதர்கள்
மதப்பாகுபாட்டை ஏற்படாதவாறு கவனத்துடன் நடந்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
கேரளாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும் பாதிரியாரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீஷ்வரன், சமூக மற்றும் ஆன்மீக தலைவர்கள் மத நல்லிணக்கத்தை பாதிக்கிற இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்க கூடாது என தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாகக் கூறினார். ஏற்கெனவே, சாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் நடைபெறும் குற்றங்களின் எண்ணிக்கையை கணக்கிட முடியவில்லை. இந்த சூழலில் அத்தகைய அறிக்கையை ஒரு மதத் தலைவரிடமிருந்து எதிர்பார்க்கப்படவில்லை. சகோதரத்துவத்தையும் அமைதியையும் உறுதிப்படுத்த அனைவரும் கட்டுப்பாடுடன் நடந்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
ஆனால், கேரள பாஜக பாதிரியாரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. "பாதிரியார் சொன்னது உண்மைதான். 'லவ் ஜிஹாத்' மற்றும் 'போதைப்பொருள் ஜிஹாத்' ஆகிய இரண்டும் பரவலாக உள்ளன. நாங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றம் சாட்டவில்லை. ஆனால் அந்த மதத்தில் உள்ள தீவிரவாதிகள் அது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர் என அம்மாநில பாஜக தலைவர் கே சுரேந்திரன் கூறினார்.
முன்னதாக, இதே பாதிரியார் கடந்த மாதம், கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் கிறிஸ்தவர்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், 2000ம் ஆண்டுக்கு பிறகு திருமணம் செய்து கொண்ட கிறிஸ்தவ தம்பதிகள் நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 1500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்து அது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.