Pegasus Spyware | பெகசஸ் விவகாரத்தில் சுயாதீன விசாரணை கோரும் மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!
பொது வாழ்கையில் ஒப்புயர்வற்ற நிலையில் இருக்கும் சிலர் தங்கள் தொலைபேசி எண்கள் பெகசஸ் உளவுச் செயலியால் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் - உச்சநீதிமன்றம்
பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாராத்தில் உண்மைதன்மையை கண்டறிய சுயாதீன விசாரணை கோரும் மனு மீதான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள், முன்னாள் தேர்தல் ஆணையர், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், மத்திய அமைச்சர்கள், ஊடகங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் என 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் பெகசஸ் உளவுச் செயலியால் உளவு பார்க்கப்பட்டிருக்லாம் என 'pegasus Project" தெரிவித்தது.
இதையொட்டி, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாராத்தில் சுயாதீன விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளார் ராம் மற்றும் சிலர் (N Ram & Ors v. Union of India) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
மத்திய அரசு வாதம்:
கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ஆம் தேதி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் இரண்டு பக்க பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், பெகசஸ் உளவு மென்பொருள் மூலம் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு ஆதாரம் இல்லை. பெகசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சில நபர்களின் தொலைபேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை.
பெகாசஸ் போன்ற உளவு பென்போருளை அரசாங்கம் பயன்படுத்துகிறதா? இல்லையா? போன்ற தகவல்களை பொது வெளியில் வெளியிடுவது தேசிய பாதுகாப்பு, குறிப்பாக பொது அவசரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை சமரசம் செய்வதாக அமைந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
விசாரணைக் குழு அமைக்க தயாராக இருக்கிறோம்:
ஒரு பொறுப்பான அரசாங்கம் என்ற முறையில் தகுதி வாய்ந்த நடுநிலை நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைப்போம் என்று உச்சநீதிமன்றத்தில் துஷார் மேத்தா தெரிவித்தார். அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம். தகவல்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு அல்ல. ஆனால், அதை நிபுணர்கள் குழுவிடம் சமர்பிக்கவே விரும்புகிறோம். பொது வெளியில் அல்ல. எனவே, நிபுணர் குழுவை உருவாக்க அனுமதி கோருகிறோம் என்று துஷார் மேத்தா தாக்கல் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு, பெகாசஸ் ஒட்டுக் கேட்பு விவகாரத்தில் தனி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் குறித்து மத்திய அரசு பதில் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் (Pre admission Notice) அனுப்பியது.
இருப்பினும், தேசப் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை. ஆனால், பொது வாழ்கையில் ஒப்புயர்வற்ற நிலையில் இருக்கும் சிலர் தங்கள் தொலைபேசி எண்கள் பெகசஸ் உளவுச் செயலியால் உளவு பார்க்கப்பட்டிருக்லாம் என்று புகாரளித்துள்ளனர் என்று தெளிவுபடுத்தியது.
இன்று விசாரணை: இந்நிலையில், பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாராத்தில்சுயாதீன விசாரணை கோரும் மனு மீதான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது.
மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்த மத்திய அரசு : முன்னதாக, பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி சில நபர்களின் தொலைப்பேசிகள் வேவு பார்க்கப்படுவதாக வரும் செய்திகள் குறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மக்களவையில் அறிக்கையை சமர்பித்தார். ஆனால், பெகசஸ் பென்போருளை இந்திய அரசு வாங்கவில்லை என்று உறுதிப்பட தெரிவிக்கவில்லை.
மக்களவையில் அளித்த பதிலில், " தேசிய பாதுகாப்பு, குறிப்பாக பொது அவசரம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பின் காரணமாக, மத்திய மற்றும் மாநில முகமைகளால் மின்னணு உபகரணங்களை சட்டப்பூர்வமாக கண்காணிப்பதற்கு நன்கு நிறுவப்பட்ட முறை இந்தியாவில் உள்ளது. இந்திய தந்தி சட்டம், 1885-ன் பிரிவு 5(2) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம், 2020-ன் 69-ம் பிரிவின் கீழ் மின்னணு உபகரணங்களை சட்டப்பூர்வமாக கண்காணிப்பதற்கான வேண்டுகோள்கள் வைக்கப்பட வேண்டும். பட்டியலில் உள்ள எண்கள் வேவுபார்க்கப்பட்டனவா என்பது கூற இயலாது என்று செய்தியை வெளியிட்டவர் கூறுகிறார்.
வேவு பார்க்க பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் தொழில்நுட்பத்தின் உரிமையாளர் நிறுவனம் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. சட்டப்பூர்வமில்லா வேவுபார்த்தல் நடைபெறாமல் இருப்பதை நமது நாட்டின் நன்கு நிறுவப்பட்ட செயல்முறைகள் உறுதி செய்கின்றன. எனவே, இந்த விஷயத்தை தர்க்க கண்ணோட்டத்தோடு நாம் அணுகினால், இந்த பரபரப்பில் உண்மை இல்லை என்பது நன்கு புலப்படும்' என்று தெரிவித்தார்.