SpiceJet: திக் திக் பயணம்! ஒரு மணி நேரமாக விமான கழிவறையில் சிக்கிய பயணி - மன்னிப்பு கேட்ட நிறுவனம்
மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பெஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் சுமார் ஒரு மணி நேரமா சிக்கிக் கொண்டிருந்தார்.
SpiceJet: மும்பையில் இருந்து பெங்களூரு சென்ற ஸ்பெஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் சுமார் ஒரு மணி நேரமா சிக்கிக் கொண்டிருந்தார்.
விமான கழிவறையில் சிக்கிய பயணி:
மும்பையில் இருந்து நேற்று அதிகாலை 2 மணியனிக்கு பெங்களூருவுக்கு ஸ்பெஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு பிறகு ஆண் பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றிருக்கிறார். அங்கு, கழிவறை கதவின் பூட்டு பழுதாகி இருந்ததால் அவரால் வெளியே வர முடியாமல் இருந்திருக்கிறார்.
சில நிமிடங்கள் கதவை திறக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், கழிவறை கதவை திறக்க முடியாமல் அதிகாலை 3.42 மணி வரை உள்ளேயே இருந்திருக்கிறார். பெங்களூருவில் விமானம் தரையிறங்கிய பிறகே, ஊழியர்கள் விமானத்தில் ஏறி கதவை உடைத்து அவரை மீட்டுள்ளனர்.
ஒரு மணி நேரமாக திக் திக் பயணம்:
இதற்கிடையில், அதாவது கழிவறையில் சிக்கி கொண்டிருந்த நேரத்தில் பயணிக்கு ஊழியர்கள் ஒரு குறிப்பை அனுப்பி உள்ளனர். அதில், "சார், எங்களால் முடிந்தவரை கதவை திறக்க முயற்சித்து வருகிறோம். ஆனால், எங்களால் கதவை திறக்க முடியவில்லை. நீங்க பயப்பட வேண்டாம். சில நிமிடங்களில் விமானம் தரையிறங்கிவிடும்.
The passenger who got stuck inside the lavatory for about an hour on SpiceJet flight operating from Mumbai to Bengaluru is being provided a full refund: SpiceJet Spokesperson https://t.co/nrrxaDGC4c
— ANI (@ANI) January 17, 2024
எனவே, தயவு செய்து கழிவரை மூடியில் உட்கார்ந்து உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள். சில நிமிடங்களில் மெயின் கதவு திறக்கப்படும். அதன் பிறகு இன்ஜினியர் வருவார். நீங்கள் பயப்பட வேண்டாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து, ஒரு மணி நேரமாக கழிவறையில் சிக்கிக் கொண்ட நபரை பத்திரமாக மீட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்ட விமான நிறுவனம்:
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பெஸ்ஜெட் நிறுவனம் கூறுகையில், "மும்பையிலிருந்து பெங்களூருக்குச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கழிவறையில் பயணி ஒருவர் ஒரு மணி நேரமாக சிக்கி தவித்தார். இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். கதவின் பூட்டில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது. பயணம் முழுவதும், எங்கள் குழுவினர் பயணிக்கு உதவி மற்றும் வழிகாட்டுதலை வழங்கினர். அவர் மீட்கப்பட்டதும் மருத்துவ உதவி வழங்கப்பட்டது. பயணிக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். உங்களது விமான கட்டணத்தை முழுவதுமாக திருப்பி தருகிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பளார் பளார்! விமானியை சரமாரியாக அறைந்த பயணி - இண்டிகோ விமானத்தில் மீண்டும் சர்ச்சை!