Pahalgam Attack: கொந்தளிப்பில் இந்தியா; பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டமா?
காஷ்மீர் பகல்ஹாம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணைய அலுவலகத்திற்கு கேக்குடன் ஒரு நபர் சென்ற விஷயம் விஸ்வரூபம் ஆகியுள்ளது.

காஷ்மீரில் உள்ள பகல்ஹாம் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய மக்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேக்குடன் சென்ற பாகிஸ்தான் உயர் ஆணைய உறுப்பினர்:
இந்த தீவிரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதல் நடந்த அன்றே தெரிவித்தது. ஆனால், மத்திய அரசு இந்த தீவிரவாத தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் நேரடி தொடர்பு இருப்பதாக நம்புகிறது.
View this post on Instagram
இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் இன்று அங்கு ஒருவர் கேக் ஒன்றுடன் நடந்து சென்றார். அப்போது, அவரிடம் எதற்காக கேக் கொண்டு செல்கிறீர்கள்? எதற்காக கொண்டாட்டம்? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த ஊழியர் எந்த பதிலும் கூறாமல் சென்றுவிட்டார். அவர் பாகிஸ்தான் தூதரக பணியாளரா? அல்லது வேறு யாருமா? என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை.
விசா, தண்ணீர் அனைத்தையும் நிறுத்திய இந்தியா:
பகல்ஹாம் தாக்குதல் இந்தியா முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஆணையம் அலுவலகத்தின் ஊழியர் கொண்டாட்டத்திற்காக கேக்குடன் சென்றிருப்பது மேலும் பரபரப்பையும், பதற்றத்தையும் அதிகரித்துள்ளது. இந்த விவகாரத்திற்கு பாகிஸ்தானே முழு காரணம் என்று இந்திய அரசாங்கம் நம்பும் நிலையில், டெல்லியில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு வழங்கப்பட்ட பாதுகாப்பை இந்திய அரசு வாபஸ் பெற்றது.
மேலும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பபட்டு கொண்டிருந்த சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் உள்ளே வருவதற்கு பாகிஸ்தானியர்கள் யாருக்கும் இனி விசா வழங்கப்படாது என்றும் இந்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் தற்போது மருத்துவ தேவைக்காக வந்துள்ள பாகிஸ்தானியர்களுக்கான மருத்துவ விசா வரும் 29ம் தேதி வரை மட்டுமே செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் கொந்தளிப்பு:
இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்கனவே உறவு சிக்கலாக உள்ள நிலையில், இந்த விவகாரத்திற்கு பிறகு மேலும் சிக்கல் ஆகியுள்ளது. புல்வாமா தாக்குதல், பதன்கோட் தாக்குதல் ஆகிய தாக்குதலை காட்டிலும் இந்த தாக்குதல் மிக மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது. இந்தியாவில் மும்பை தாக்குதலுக்கு பிறகு பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தீவிரவாத தாக்குதலாக இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது.

