National Anthem | தேசிய கீதத்தை பாடி பதிவிட்ட வீடியோ: ஓங்கி ஒலித்த 1.5 கோடி இந்தியர்களின் குரல்..!
விடுதலையின் அம்ரித் மஹோத்சவம், என்ற பெயரில் நம் தேசிய கீதத்தை பாடி இணையத்தின் பதிவேற்றும் விழாவில் ஏராளமான இந்தியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
விடுதலையின் அம்ரித் மஹோத்சவம், என்ற பெயரில் நம் தேசிய கீதத்தை பாடி இணையத்தின் பதிவேற்றும் விழாவில் ஏராளமான இந்தியர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது.
இதனை ஒட்டி மத்திய கலாச்சார அமைச்சகம் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தது. இந்தியர்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தங்கள் குரலில் தேசிய கீதத்தைப் பாடி அந்த வீடியோவை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டது.
அது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் தங்கள் குரலில் தேசிய கீதத்தைப் பாடி அந்த வீடியோவை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏன் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியர்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் இதில் உற்சாகமாகக் கலந்து கொண்டுள்ளனர்.
அதேபோல், கலைஞர்கள், சான்றோர், தலைவர்கள், அதிகாரிகள், ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் இந்நிகழ்ச்சியில் உற்சாகமாகக் கலந்து கொண்டுள்ளனர். இந்திய தேசிய கீதம், ஜன கன மன அதிநாயக என்று காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், அருணாச்சலப் பிரதேசம் தொடங்கி கட்ச் வரையிலும் ஓங்கி ஒலிக்கிறது.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அளித்துள்ள அபரிமிதி ஆதரவும் இந்திய மக்கள் எங்கிருந்தாலும் அவர்களின் எண்ணம் எல்லாம் தாய்த் திருநாட்டின் மீது தான் இருக்கும் என்பதை உணர்த்தியுள்ளது.
இதுவரை 15 மில்லியன் பதிவுகள் வந்துள்ளன. இந்திய மக்கள் மனம் வைத்துவிட்டால் எந்த ஒரு இலக்கும் எட்டக் கடினமல்ல என்பதையே இது உணர்த்தியுள்ளது.
இந்திய தேசிய கீதம் நம் பெருமிதத்தின் அடையாளம். அந்த அடையாளத்தை ஆவணப்படுத்தும் இந்த முயற்சி, அனைவருக்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. இந்தியாவின் ஒருமைப்பாட்டை உணர்ந்து கொள்ள ஒரு அழுத்தமான செய்தியை இந்தியர்கள் கடத்தியுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "75-வது ஆண்டு சுதந்திர ஆண்டை நினைவுகூரும் வகையில் அமிர்த மகோத்சவ் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆகஸ்டு 15-ஆம் தேதிக்குள் தேசிய கீதத்துடன் தொடர்புடைய ஒரு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு வலைதளமும் உருவாக்கப்பட்டுள்ளது. அது ராஷ்ட்ரகன்.இன் ஆகும். இதன் உதவியுடன் நீங்கள் தேசிய கீதத்தை பாடி பதிவு செய்ய முடியும். அதன்மூலம் நீங்கள் இந்த முயற்சியில் உங்களை இணைத்துக் கொள்ளலாம்" என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.