PMGKP insurance : ஐந்தில் 1 பங்கு மருத்துவர்களுக்கு மட்டுமே கிடைத்த மத்திய காப்பீட்டு நிதி..
கடந்த 2020-ஆம் ஆண்டு ‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா’ என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு காப்பீடு நிதியாக 50 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர நாடு முழுவதும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக நோய் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றனர். இதனால் சிலர் நோய் தொற்று ஏற்பட்டு இறந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் அளிக்கும் வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டு ‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் யோஜனா’ என்ற திட்டம் வடிவமைக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கொரோனா பாதிப்பால் இறந்த மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களின் குடும்பங்களுக்கு காப்பீட்டு நிதியாக 50 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன் அடைந்த மருத்துவர்கள் தொடர்பான தரவுகளை இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் இதுவரை 756 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வெறும் 168 மருத்துவர்களுக்கு மட்டுமே 50 லட்சம் ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. இது கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்த மருத்துவர்களின் எண்ணிக்கையில் 5-இல் 1 பங்கு மருத்துவர்களுக்கு மட்டும் கிடைத்துள்ளது. மேலும் சுகாதார பணியாளர்களில் 119 பேர் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் பயன் அடைந்துள்ளனர். இதுவரை மொத்தமாக இந்தத் திட்டத்தின் கீழ் 289 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தரவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தக் காப்பீட்டு திட்டம் கடந்த மாதம் 25-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனை மேலும் நீட்டிக்க இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த சங்கத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் மத்திய சுகாதாரத் துறை கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், இத்திட்டத்தை இந்தாண்டும் நீட்டிக்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் உயிரிழந்த மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி விரைவில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் சூழலில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என்று மருத்துவர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்த தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,61,500 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 1,501 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதவிர, தற்போது 18,01,316 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சூழலில் மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.