(Source: ECI/ABP News/ABP Majha)
Karnataka Marriage: காதலர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்! ஆன்லைனிலேயே திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம் - ஆனா ஒரு கண்டிசன்!
கர்நாடக மாநிலத்தில் ஆன்லைனிலேயே திருமணப் பதிவு செய்யும் நடைமுறை நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் தம்பதியினர், தங்களின் திருமணத்தைப் பதிவு செய்து கொள்வது என்பது தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், விசா பெறுவது முதல் பல்வேறு விஷயங்களுக்கு திருமண பதிவுச் சான்றிதழ் அவசியம் என்பதல், திருமணமான ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
திருமணச் சான்றிதழ்:
திருமணத்தை பதிவு செய்வதற்கு ஒவ்வொரு மதத்திற்கு ஏற்ப வெவ்வேறு சட்டங்கள் இருக்கின்றன. அத்துடன் சிறப்புச் திருமணச் சட்டமும் இருக்கிறது. இந்த சட்டங்களின் அடிப்படையில் தான் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை 2009ஆம் ஆண்டு முதல் திருமணப் பதிவு செய்வதை கட்டாயமாக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் திருமணத்தைப் பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டும். ஆனால், அதற்கு முன்பு, தம்பதியினரின் புகைப்படங்கள் உள்ளிட்ட நகலுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிறகு, சார் பதிவாளர் அலுவலகம் வர வேண்டிய தேதி விவரங்கள் அனுப்பப்படும்.
இதனை அடுத்து தான் சார் பதிவாளர் வந்து திருமணத்தைப் பதிவு செய்ய முடியும். திருமணம் நடந்து 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இல்லையென்றால், அதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதுதான் தமிழ்நாட்டில் தற்போது வரை உள்ள நடைமுறைகள். இதே போன்று, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது.
ஆன்லைனில் திருமணச் சான்றிதழ்:
இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் ஆன்லைனிலேயே திருமணப் பதிவு செய்யும் நடைமுறை நேற்று கொண்டு வரப்பட்டது. திருமண சட்டம் 1955-இன் படி திருமணப் பதிவை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த வசதியை மல்லேஸ்வரம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தொடங்கி வைத்தார். இதன் மூலம், இனிமே சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமில்லை.
வீட்டில் இருந்தப்படியே ஆதார் அட்டை, தம்பதியரின் புகைப்படங்கள், திருமணப் புகைப்படங்கள், திருமண வீடியோக்கள், வயது விவரத்திற்கு கல்லூரி, பள்ளி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை சமர்பித்து, ஆன்லைனிலேயே கையெழுத்திட்டு, திருமணப் பதிவு செய்யலாம்.
Now one doesn't have to visit the sub-registrar's office for registering their marriage under Hindu Marriage Act. A cerificate is generated at the comfort of home by providing wedding invite,video, Aadhaar. One more step towards transparency and service delivery. #revenue #gok… pic.twitter.com/a233SlXO9l
— Krishna Byre Gowda (@krishnabgowda) February 15, 2024
இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா கூறுகையில், ”திருமண பதிவு செயல்முறையை நவீனமயமாக்கும் நோக்கில் ஆன்லைனில் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கர்நாடகாவில் 30 சதவீத திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.
இதனால், ஆன்லைனில் திருமணப் பதிவு நடைமுறையை கொண்டு வந்தோம். இந்த நடைமுறை சிறப்பு திருமணப் பதிவுக்கு கிடையாது. இந்த ஆன்லைனில் திருமணப் பதிவு இந்து மதத்திற்கு மட்டுமே பொருந்தும். இந்த மாத இறுத்திக்குள் மாநில முழுவதும் விரிவுப்படுத்தப்படும்" என்றார்.