RT PCR Test: ‛அலர்ட்’ நாடுகளில் இருந்து வரும் பயணிகள்: இன்று முதல் கட்டாய ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை!
எச்சரிக்கை பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள் பி.சிஆர். பரிசோதனைக்கு கட்டாயம் முன்பதிவு செய்யும் முறை இன்று முதல் அமலுக்கு வந்தது.
உலகம் முழுவதும் 89 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த ஒமிக்ரான் வைரஸ் காரணமாக இந்தியாவிலும் 153 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் விமான நிலையங்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, “ ஏர் சுவிதாவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் எச்சரிக்கை பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும்போது அல்லது 14 நாடுகளுக்கு முன் இந்த நாடுகளுக்கு சென்றுவிட்டு வேறு நாட்டில் இருந்து வரும்போதும் அங்கிருந்து புறப்படும் முன்பே ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
ஏர் சுவிதா தளத்தில் உள்ள பயணிகளுக்கான விண்ணப்ப படிவத்தில் அனைத்து விவரங்களையும் வழங்கிட வேண்டும். டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூர், ஹைதராபாத் விமான நிலையங்களில் வந்திறங்கும் பயணிகள் பி.சி.ஆர். பரிசோதனை முன்பதிவு செய்ய வேண்டும். இந்த புதிய நடைமுறை டிசம்பர் 20-ந் தேதி (இன்று) முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஒருவேளை பயணி பி.சி.ஆர். பரிசோதனைக்கு முன்பதிவு செய்யாமல் அல்லது முன்பதிவு செய்வதில் சிரமங்களைச் சந்தித்து அதனால் முன்பதிவு செய்யாமல் விமானத்தில் ஏறினால் அவர் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டார். ஒருவேளை அவர் பயணம் செய்துவிட்டால் , சம்மந்தப்பட்ட விமான நிறுவனத்தின் அதிகாரிகள் அவரை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை முடிவில் நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவுகள் வந்தால் மட்டுமே பயணிகள் விமானநிலையத்தை விட்டு வெளியே செல்ல முடியும். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒமிக்ரான் வைரஸ் எச்சரிக்கை நாடுகள் பட்டியலில் ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வோனா, ஜிம்பாப்வே, தான்சானியா, ஹாங்காங், சீனா, கானா, மொரிஷியஸ், நியூசிலாந்து மற்றும் இஸ்ரேல் நாடுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Watch video : காரை சரிசெய்ய 20 ஆயிரம் யூரோவா..? வெடிக்க வைத்து வெறியை தீர்த்த உரிமையாளர்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்