Omicron Variant : ஒமிக்ரான் BF.7.. இந்தியாவில் முதல்முறை.. புதிய கொரோனா அலை உருவாகிறதா? கவனமா இருங்க மக்களே...
புதிய வகை அதிக தீவிரத்தொற்று தன்மை கொண்டிருப்பதாகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
கொரோனா பெருந்தொற்று கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அது உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது.
இந்நிலையில், ஒமைக்ரான் கொரோனாவிலிருந்து BA.5.1.7 என்ற துணை வகை உருமாறி இருக்கிறது. இது, அதிக தீவிர தொற்று தன்மை கொண்டிருப்பதாகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. BF.7 கொரோனா முதல்முறையாக குஜராத் உயிரிதொழில்நுட்பம் ஆராய்ச்சி மையத்தில் கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
சீனாவில் சமீபத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க BF.7 மற்றும் BA.5.1.7 வகையே காரணம் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த உருமாறிய கொரோனா வகைகள், நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து தப்பிக்கும் திறன் கொண்டிருப்பதால் அக்டோபர் 22ஆம் தொடங்கப்படும் தீபாவளி விழாக்காலத்தை முன்னிட்டு அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக போடப்பட்டுள்ள தடுப்பூசி மற்றும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடம் உருவாகியுள்ள நோய் எதிர்ப்பு சக்தியிலிருந்து மற்ற கொரோனா வகைகளை காட்டிலும் BF.7 வகை தப்பிக்கும் திறன் கொண்டது என இரண்டு ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவரும் மருத்துவருமான என்.கே. அரோரா கூறுகையில், "அடுத்த இரண்டு மூன்று வாரங்கள் முக்கியமானவை. கொரோனா இன்னும் உள்ளது. மேலும், புதிய கொரோனா மாறுபாடுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் பதிவாகி வருகின்றன.
வெளிப்படையாக, அவர்களிடமிருந்து நாம் தப்பிக்க முடியாது. எனவே, பண்டிகைகள் இன்னும் சில நாட்களே உள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்" என்றார்.
டெல்லியில் அதிகரிக்கும் கொரோனா
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சமயத்தில், டெல்லியில் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. சோதனை செய்து கொள்பவர்களில் பாதிப்பு ஏற்படும் விகிதம் 2% க்கு மேல் உயர்ந்துள்ளது.
சனிக்கிழமையன்று கொரோனா காரணமாக டெல்லியில் இருந்து இறப்பு எதுவும் பதிவாகவில்லை என்றாலும், டெல்லியில் 135 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை 112 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சோதனை செய்தவர்களில் 1.75 விழுக்காட்டினருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா
கொரானாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. மும்பையில் சனிக்கிழமையன்று 180 புதிய கோவிட் -19 வழக்குகள் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் 163 புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத்தில் 28 மற்றும் 68 வழக்குகள் பதிவாகியுள்ளன.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )