Coromandel Express Accident: மோப்ப நாய் உதவியுடன் தொடரும் மீட்பு பணி.. ரயில்வே அமைச்சர், ஒடிசா முதல்வர் நேரில் ஆய்வு
ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான நிலையில், 12 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி நடைபெற்றுள்ளது.
ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளான நிலையில், 12 மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலானது ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று இரவு 7 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி அருகில் செல்லும் மற்றொரு தண்டவாளத்தில் விழுந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதே வழித்தடங்களில் வந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயிலும், சரக்கு ரயில் ஒன்றும் தடம் புரண்ட பெட்டிகள் மீது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் உடனடியாக விரைந்தனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்பு பணிகள் 12 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. தேசிய, மாநில மீட்பு படையினருடன் விமானப்படையினரும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். விபத்து நடைபெற்றது இரவு நேரம் என்பதால் கடும் சவால் ஏற்பட்டது. ஆனால் விடிய விடிய நடந்த மீட்பு பணியில் இதுவரை 280 பேர் பலியாகியுள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
A1, A2, B2, B3, B4, B5, B6, B7, B8, B9 ஆகிய பெட்டிகள் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலில் சென்னைக்கு வர 867 பேர் முன்பதிவு செய்திருந்தனர். விபத்தில் சிக்கிய பயணிகள் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு சார்பிலும், ரயில்வே துறை சார்பிலும் அவசரகால எண்கள் அறிவிக்கப்படுள்ளது. இதனிடையே மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இரவில் இருந்தே மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார்.
இதற்கிடையில் ரயில் விபத்தில் அடையாளம் காணப்பட்ட உயிரிழந்தவர்களின் உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும், அடையாளம் தெரியாத பயணிகளுக்கு சட்டப்படியான நடைமுறை பின்பற்றப்படும் எனவும் ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். இன்று காலை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மீட்புப் பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரயில் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றும், மோப்ப நாய் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தற்போது எங்கள் கவனம் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உள்ளது என்றும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதிக்குப் பிறகு இந்த வழித்தடத்தில் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கும் தொடங்கும் எனவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து விபத்து நடந்த இடத்திற்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டுள்ளார்.