Cancelled Trains: ஒடிசா ரயில் விபத்து எதிரொலி...ரத்து செய்யப்பட்ட, பாதை மாற்றிவிடப்பட்ட ரயில்களின் பட்டியல்..!
ரயில் விபத்தின் விளைவாக ரத்து செய்யப்பட்ட, பாதை மாற்றிவிடப்பட்ட ரயில்கள் தொடர்பான விவரங்களை கீழே காணலாம்.
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288ஆக அதிகரித்துள்ளது. 747 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 56 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த அதிகாரப்பூர்வ தகவலை இந்தியல் ரயில்வே வெளியிட்டுள்ளது.
ரயில் விபத்து நடந்தது எப்படி?
கொல்கத்தாவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிஷாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தது. இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநில மற்றும் தேசிய மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒடிஷாவில் இன்று அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு, ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இதேபோல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ரயில் விபத்தின் விளைவாக ரத்து செய்யப்பட்ட, பாதை மாற்றிவிடப்பட்ட ரயில்கள் தொடர்பான விவரங்களை கீழே காணலாம்.
- 18044 பத்ரக் - பத்ரக்கிலிருந்து செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ்
- 20890 திருப்பதி - திருப்பதியிலிருந்து செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ்
- 12551 பெங்களூரு - பெங்களூரில் இருந்து செல்லும் காமாக்யா ஏசி எஸ்எஃப் எக்ஸ்பிரஸ்
- 12864 பெங்களூரு - பெங்களூரில் இருந்து செல்லும் ஹவுரா எக்ஸ்பிரஸ்
- 12253 பெங்களூர் - பாகல்பூர் அங்க எக்ஸ்பிரஸ்
- 08411 பாலசோர் - பாலசோரிலிருந்து செல்லும் புவனேஸ்வர் சிறப்பு ரயில்
- 08415/08416 ஜெனாபூரில் இருந்து பூரி செல்லும் ரயில், பூரியில் இருந்து ஜெனாபூர் செல்லும் ரயில்
- 08439 பூரி-பாட்னா சிறப்பு ரயில்
முன்னதாக, பாலசோரில் ரயில் விபத்து நடத்த இடத்தில் சீரமைப்பு பணிகளை பார்வையிட்ட பிரதமர் மோடி, கட்டாக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை சந்தித்த பின்னர் பேட்டியளித்த பிரதமர் மோடி, இந்த சம்பவத்தில் யாரேனும் தவறு இழைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அரசின் முழு பலத்தையும் பயன்படுத்தி சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.