பைபிள் வைத்திருந்த காரணத்தால்...இரண்டு வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை? வடகொரியாவில் அதிர்ச்சி..
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.
வடகொரியாவில் பைபிள் வைத்திருந்த காரணத்தால் கிறிஸ்தவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பைபிள் வைத்திருந்ததால் குழந்தைகள் உள்பட அவர்களின் குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியாவில் அதிர்ச்சி:
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் சர்வதேச மத சுதந்திர அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது. "வடகொரியாவில் 70,000 கிறிஸ்தவர்களுடன் பிற மதத்தினரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைக்கு அனுப்பப்பட்ட பலரில் இரண்டு வயது சிறுவனும் ஒருவர்.
அவரது பெற்றோரிடம் பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கிறிஸ்தவ மதப் பழக்கவழக்கங்களை பின்பற்றியதற்காகவும் பைபிளை வைத்திருந்ததற்காகவும் ஒட்டு மொத்த குடும்பமும் கைது செய்யப்பட்டது. இரண்டு வயது குழந்தை உட்பட முழு குடும்பமும் 2009இல் அரசியல் சிறை முகாமில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொண்டதாக விவரித்துள்ளனர். ஷாமானிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு எதிராகவும் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும் நடந்த 90% மனித உரிமை மீறல்களுக்கு மாநில பாதுகாப்பு அமைச்சகமே பொறுப்பு.
இரண்டு வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை:
வட கொரிய அரசாங்கம் மதச் சடங்குகளில் ஈடுபடும், மதப் பொருட்களை வைத்திருக்கும், மத நபர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் அல்லது மத நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ளும் நபர்களைத் துன்புறுத்துகிறது. துன்புறுத்தப்படும் நபர்கள் கைது செய்யப்படலாம். காவலில் வைக்கப்படலாம்.
வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படலாம். சித்திரவதை செய்யப்படலாம். நீதி வழங்கப்படாமல் மறுக்கலாம். நாடு கடத்தப்படலாம். வாழ்வதற்கான உரிமை மறுக்கப்படலாம் அல்லது பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படலாம்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரிய ஃப்யூச்சர் என்ற அரசு சாரா அமைப்பு தயாரித்த அறிக்கையை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் மேற்கோள் காட்டியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், கொரியா ஃபியூச்சர் ஒரு அறிக்கையை வெளியிட்டது. இது வட கொரியாவில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மத சுதந்திரத்தை துன்புறுத்தல் சம்பவங்களை ஆவணப்படுத்தியது.
துன்புறுத்தலுக்கு ஆளான 151 கிறிஸ்தவ பெண்களின் நேர்காணலின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. தன்னிச்சையாக தடுப்புக்காவல் வைத்தது, சித்திரவதை செய்தது, நாடு கடத்தியது, பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியது அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
வட கொரியாவில் வினோதமான உத்தரவுகளை பிறப்பிப்பது வழக்கமாகிவிட்டது. அதன் தொடர்ச்சியாக, சமீபத்தில், "bomb", "gun" மற்றும் "satellite" போன்ற தேசபக்தி பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வட கொரிய அரசு உத்தரவிட்டது. மேலும், மென்மையான பெயர்களை வைக்க அரசு கட்டுப்பாடு விதித்தது குறிப்பிடத்தக்கது.