லைசென்ஸுக்கு, இனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வாகனம் ஓட்டிக் காட்டவேண்டாம் : புதிய விதிமுறைகள் என்ன?
மத்திய அரசின் புதிய உத்தரவுப்படி வரும் ஜூலை 1-ந் தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெறும் ஓட்டுநர்கள் ஆர்.டி. ஓ. அலுவலகத்தில் நடத்தப்படும் வாகன ஓட்டும் தேர்வில் பங்கேற்கத் தேவையில்லை என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்துறை அமைச்சகம் ஓட்டுநர் உரிமத்திற்கு பல்வேறு புதிய விதிகளை அமல்படுத்த கடந்த சில தினங்களாகவே திட்டமிட்டுக் கொண்டிருந்தது. அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. அதில், குறிப்பிடத்தக்கதாக ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் முறையாக வாகனம் கற்றுக்கொண்டவர்களுக்கு நேரடியாக உரிமம் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசு இன்று பிறப்பித்த உத்தரவில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் ஓட்டுநர்கள், ஓட்டுநர் உரிமம் கோரி விண்ணப்பிக்கும்போது நடத்தப்படும் தேர்ச்சி பெற பங்கேற்பதில், இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. வரும் 1-ஆம் தேதி முதல் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இவ்வாறு மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும்போது சிறப்பு பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைக்க வாய்ப்புகள் ஏற்படும். அதனால், சாலை விபத்துகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.