கொரோனா தடுப்பூசி செலுத்த சட்ட ரீதியான அழுத்தம் இல்லை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சட்டப்பூர்வமான அழுத்தம் ஏதுமில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள சட்டப்பூர்வமான அழுத்தம் ஏதுமில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தடுப்பூசி போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்வதில் பயனரிடம் முன் கூட்டியே தெரிவித்து அனுமதி பெற வேண்டியதில்லை. இந்திய அரசாங்கம், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள் அனைவருமே செலுத்திக் கொள்ளுங்கள் என்று பொது நலன் கருதி பிரச்சாரம் செய்யும் போது அதற்கான சட்டப்பூர்வ அழுத்தத்திற்கான தேவை எங்கிருந்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் உயிரிழந்த இரு சிறுமிகளின் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில் தான் மத்திய அரசு இந்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
ஒரு நபர் தடுப்பூசி காரணமாக உயிரிழந்தால், அவருக்கு சட்டப்பூர்வமாக என்ன நஷ்டயீடு வந்து சேர வேண்டுமோ அதற்கு அவர் தகுதியானவர். ஆனால் இது போன்ற நிவாரணங்கள் ஒவ்வொரு வழக்கிலும் மாறுபடும். அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, இழப்பு அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். ஆகையால் தடுப்பூசியால் இறப்புகள் ஏற்படும் போது அதற்காக மாநில அரசை எந்த அளவுக்கு அதற்கு பொறுப்பாக்க முடியும் என்பது கேள்விக்குறியாகிறது.
கொரோனா தடுப்பூசியை அரசு இலவசமாக செலுத்தி வருகிறது. தாமாக விருப்பப்பட்டு வருபவர்களுக்கு செலுத்துகிறதே தவிர யாரையும் வலுக்கட்டாயம் செய்வதில்லை. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விளம்பரங்கள் பிரச்சாரங்கள் வாயிலாக ஊக்குவிக்கப்படுகின்றனர். அவ்வளவே. எல்லா மருந்துகளைப் போல் தடுப்பூசிகளுக்கும் சில நேரங்களில் சில பக்க விளைவு இருக்கலாம். அதனால் தான் பயனருக்கு அதை செலுத்திக் கொள்வதற்கான முடிவை எடுக்கும் முழு உரிமையும் வழங்கப்படுகிறது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தொடங்கப்பட்டது. தொடக்கத்தில், மருத்துவத்துறைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் போன்ற ஒருசில பிரிவினருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுவந்தது. ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி மிக மந்தமாகவே நடைபெற்றுவந்தது. ஆனால் இப்போது 200 கோடி டோஸ் தாண்டி தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. பூஸ்டர் டோஸ்களும் செலுத்தப்பட்டு வருகின்றன.
12 - 17 வயது உடையவர்கள் தனியார் மருத்துவமனைகளில் "கோவோவேக்ஸ்' தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.
12 - 17 வயது உடையவர்கள், கோர்பிவேக்ஸ் தடுப்பூசியை செலுத்த விரும்பினால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.
15 - 17 வயது உடையவர்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்த வேண்டுமானால், அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவேக்ஸின் அல்லது கோவிஷீல்ட் தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.
ஸ்புட்னிக்வி தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம்.
18 - 59 வயதுக்குட்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செலுத்தப்படாது. ஆனால், தனியார் மருத்துவமனைகளில் 18 - 59 வயதுக்குட்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.