Nitish Kumar - Mamta Banerjee : பாஜக-வை ஹீரோவில் இருந்து ஜீரோ ஆக்கவேண்டும்.. நிதிஷ்குமாரை சந்திப்புக்கு பின் பேசிய மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
பாஜக-வை ஹீரோவில் இருந்து ஜீரோ ஆக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் 2024 நாடாளுமன்ற கூட்டணி தொடர்பாக மம்தா பானர்ஜியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின் பேசிய மம்தா பானர்ஜி, பாஜகவிற்கு எதிரான அரசியல் கட்சிகள் ஒண்றிணைந்து கூட்டணி அமைப்பது தொடர்பாக எந்த ஈகோவும் இல்லை என தெரிவித்தார். மேலும் பாஜக ஊடகங்களின் உதவியுடன் பெரிய ஹீரோவாக வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
हीरो से ज़ीरो ...बीजेपी बहुत बड़ा हीरो बन गया अब उसको ज़ीरो बनाना है.... नीतीश और ममता की हुई मुलाक़ात के बाद सुनिए ममता बनर्ज़ी ने क्या कहा... pic.twitter.com/bWzVNMeumM
— Prakash Kumar (@kumarprakash4u) April 24, 2023
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேசினர். 2024 தேர்தலுக்கு எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதிஷ்குமார் இன்று மாலை சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவையும் சந்தித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே , ராகுல் காந்தி ஆகியோரை, நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்வி ஆகியோர் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஜகவுக்கு எதிராக இருக்கும் மாநில கட்சிகள், காங்கிரஸ், இடதுசாரிகளை சேர்த்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாஜகவை வீழ்த்த வேண்டும் என பல்வேறு எதிர்கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேநேரம் கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு இந்த பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸுக்கு சாதகமாக முடிவுகள் வரலாம் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்க சில கட்சிகள் போட்டிபோடும் நிலையில், கர்நாடக தேர்தல் கணிப்புகள் உண்மையானால் காங்கிரஸுக்கு அது சாதகமாக அமைய வாய்ப்புண்டு.
இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் அம்மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரை கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சந்தித்தனர். அதற்கு அடுத்த நாள் காங்கிரஸ் தலைவர் சரத் பவாரையும் சந்தித்து பேசினர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் மும்பையில் சிவசேனா உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்தித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே இந்த சந்திப்புகளின் பிண்னனியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தமுறை எப்படியாவது பாஜகவை வீழ்த்த வேண்டும் என உறுதி பூண்டுள்ள அவர் கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்கள் மற்றும் கூடுதல் சீட்டுகளை விட்டுத் தர முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலைபாட்டில் நிதிஷ்குமார், மு.க. ஸ்டாலின் ஆகியோரும் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக திரிணாமுல், ஆம் ஆத்மி, பிஆர்எஸ் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தும் பொறுப்பு நிதீஷ்குமாரிடம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி அவரும் தொடர் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.