20 லட்சம் பேர் வேலை.. 3 கோடி பேர் வருமானத்தை பறிக்கப்போகும் ஏஐ - நிதி ஆயோக்கில் ஷாக்!
ஏஐ தொழில்நுட்பம் காரணமாக 20 லட்சம் பேரின் வேலைகள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

2000 காலகட்டத்திற்கு பிறகு உலகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி அதீதி வளர்ச்சி அடைந்துள்ளது. அதன் உச்சகட்ட வளர்ச்சியாக ஏஐ தொழில்நுட்பம் பார்க்கப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் பலரின் வேலைவாய்ப்பு பறிபோகும் அபாயமும் உண்டாகியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம்:
பல துறைகளில் இந்த ஏஐ தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு உருவாகும் சூழலில், பலரின் வேலைகளும் பறிபோகும் அபாயமும் உண்டாகியுள்ளது. இதுதொடர்பாக நிதி ஆயோக் ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
20 லட்சம் பேர் வேலை:
நிதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி சுப்ரமணியம் இதுதொடர்பாக கூறியதாவது, இந்தியாவில் ஐடி துறையில் தற்போது சுமார் 80 லட்சம் பேர் வேலை செய்து வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு தாக்கத்தால் இந்தியாவில் 20 லட்சம் வேலைகள் பறிபோகும் அபாயம் உருவாகியுள்ளது.

3 கோடி பேர் வருமானம்:
அதேசமயம், ஏஐ மூலமாக அடுத்த 5 ஆண்டுகளில் 40 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும். அதற்கு ஏஐ தொடர்பான படிப்புகளை கற்றுக்கொள்ள வேண்டும். ஏஐ குறித்த பயிற்சி எதுவும் மேற்கொள்ளாமல் இருப்பவர்களே வேலையை இழக்க நேரிடும். 20 லட்சம் பேரின் வேலைவாய்ப்பு இழப்பு என்பது 20 லட்சம் பேரின் வேலைவாய்ப்பாக மட்டுமின்றி 2 முதல் 3 கோடி பேரின் வருமானத்துடன் தொடர்பு உடையது ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2 முதல் 3 கோடி பேரின் வருமானம் இதனால் பறிபோக உள்ளதாக அவர் கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியையும், வேதனையையும் உண்டாக்கியுள்ளது. அதேசமயம், சுப்ரமணியம் இதை எப்படி எதிர்கொள்ளலாம்? என்றும் அறிவுறுத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, தனி மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பயிற்சியில் இணைந்து சூழலுக்கு ஏற்ப தங்கள் திறமைகளை தகவமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

நாட்டிற்கு மக்கள்தான் உண்மையான பலம். அதிக எண்ணிக்கையிலான இளம் டிஜிட்டல் திறமையாளர்கள் உலகிலேயே இந்தியாவில்தான் உள்ளனர். ஏஐ காரணமாக வரப்போகும் மாற்றங்களை சாதகமாக மாற்றிக்கொள்ள ஏதுவாக, தேசிய ஏஐ திறமை இயக்கம் என்ற பெயரில் நாடு தழுவிய கூட்டு முயற்சியை தாெடங்க வேண்டும். உலகிலேயே அதிக ஏஐ நிபுணர்கள் கொண்ட நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அச்சத்தில் பணியாளர்கள்:
இந்தியா பொருளாதாரத்தில் 21ம் நூற்றாண்டில் மிகப்பெரிய பங்கு வகித்து வரும் ஐடி துறையில் கடந்த சில ஆண்டுகளாகவே பணிநீக்கம் என்பது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதற்கு ஏஐ தொழில்நுட்பமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முன்னணி நிறுவனமான டிசிஎஸ் தனது 6 லட்சம் பணியாளர்களில் 12 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.
நடுத்தர மற்றும் வளர்ந்து வரும் ஐடி நிறுவனங்கள் சத்தமே இன்றி தனது பணியாளர்களை பணியில் இருந்து நீக்கி வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் ஐடி உள்ளிட்ட பல துறைகளில் வேலையிழப்பு அபாயமும் மேலும் அதிகரிக்கும் என்றும அஞ்சப்படுகிறது. இதனால், பல துறையிலும் பணியாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.





















