இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டங்களா? - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரபர பதில்
இடைக்கால பட்ஜெட்டில் எந்த விதமான கவர்ச்சி திட்டங்களும் இடம்பெறாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாக, பிப்ரவரி மாதம், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன்பு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் எந்த விதமான கவர்ச்சி திட்டங்களும் இடம்பெறாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய பட்ஜெட்:
இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு அமையும் வரை அரசின் செலவினங்களுக்காக மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 2024ஆம் ஆண்டு, பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்கப்படும் பட்ஜெட், இடைக்கால செலவினங்களுக்கு பணம் ஒதுக்க அனுமதி கோருவதாக மட்டுமே இருக்கும். ஏனென்றால், நாம் தேர்தல் ஆண்டில் இருக்க போகிறோம்.
புதிய அரசாங்கம் அமையும் வரை அரசாங்கத்தின் செலவினங்களை சமாளிக்கும் நோக்கில் அரசாங்கத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். எனவே, புதிய அரசாங்கம் வந்து 2024 ஜூலையில் அடுத்த முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்" என்றார்.
இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் உலகளாவிய பொருளாதாரக் கொள்கை மன்றத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகள்:
கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக இரண்டாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்த பிறகு, நிதித்துறை அமைச்சகம் நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. அப்போதில் இருந்து இப்போது வரை, அவரே மத்திய நிதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்.
கடந்த 2020ஆம் ஆண்டு, பிப்ரவரி 1ஆம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2020-21 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பட்ஜெட் உரையை அவர் வாசித்தார். இதுவே, நீண்ட நேரம் ஆற்றப்பட்ட பட்ஜெட் உரையாகும். பட்ஜெட் உரையில் இரண்டு பக்கங்கள் மீதம் இருந்தபோதிலும், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பட்ஜெட் உரையை குறைக்க வேண்டியதாயிற்று.
முன்னதாக, 2019ஆம் ஆண்டு, ஜூலை மாதம், மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் ஆற்றிய முதல் பட்ஜெட் உரைதான் நீண்ட நேரம் ஆற்றப்பட்ட உரையாக இருந்தது. தன்னுடைய சாதனையை அவரே முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
1970-71 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த இந்திரா காந்திக்குப் பிறகு, 2019ஆம் ஆண்டில், பட்ஜெட்டை தாக்கல் செய்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் படைத்தார்.