மகாராஷ்ட்ராவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவற்காக மகாராஷ்ட்ராவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. திரையரங்குகள், பூங்காக்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலே கொரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படும் மாநிலமாக மகாராஷ்ட்ரா தற்போது உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனாவால் தினசரி 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் வரும் திங்கட்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக அம்மாநில அரசு உத்தரவிட்டது.
இதன்படி, இன்று முதல் மகாராஷ்ட்ரா முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் தவிர பிற சேவைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்று முதல் அந்த மாநிலத்தில் பேருந்து சேவைகளும் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக திரையரங்குகள், பூங்காக்கள் இன்று முதல் மூடப்பட உள்ளன. இதுதவிர, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால், பொது இடங்களில் கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த ஊரடங்கின்போது தொழில் நிறுவனங்கள், அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் கொரோனா தடுப்பு விதிகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 50 சதவீத பணியாளர்களுடன் மட்டும் அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளது. தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் வரும் ஏப்ரல் 30-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.