NHAI : 5 நாள்களுக்குள் 75 கிலோ மீட்டர் சாலை.. உலக சாதனை முயற்சியில் நெடுஞ்சாலைத்துறை..
இரண்டு நகரங்களுக்கிடையே 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு குறைவான நேரத்தில் சாலைகள் போட்டு கின்னஸ் சாதனை செய்யும் முயற்சியில் இருக்கிறது தேசிய நெடுஞ்சாலைத்துறை.
இரண்டு நகரங்களுக்கிடையே 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு குறைவான நேரத்தில் சாலைகள் போட்டு கின்னஸ் சாதனை செய்யும் முயற்சியில் இருக்கிறது தேசிய நெடுஞ்சாலைத்துறை.
அமராவதி மற்றும் அகோலா ஆகிய இரண்டு நகரங்களுக்கிடையிலான 75 கிலோ மீட்டர் தூரத்திற்கான நெடுஞ்சாலையை மிகக்குறைவான நேரத்தில் அதாவது 108 மணி நேரத்திற்குள்ளாக அல்லது 5 நாள்களுக்குள்ளாக சாலையைப் போட்டு முடித்து கின்னஸ் உலக சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த பணியானது ராஜ்பத் இன்ஃப்ராகான் என்ற நிறுவனத்திடம் ஒப்படத்துள்ளது நெடுஞ்சாலைத்துறை. இந்த நிறுவனம் ஏற்கனவே சங்லி மற்றும் சதார இடையிலான தூரத்திற்கான சாலையை 24 மணிநேரத்திற்குள் போட்டு ஏற்கனவே உலக சாதனை படைத்துள்ள நிறுவனமாகும்.
இந்த சாலை அமைக்கும் பணியானது ஜூன் 3ம் தேதி காலை 6 மணிக்குத் தொடங்கி 7ம் தேதிக்குள் முடிவடையும். இந்த உலகசாதனையானது நாளை செவ்வாய்க்கிழமை படைக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அப்படி குறித்த நேரத்திற்குள் இந்த பணி முடிக்கப்பட்டால் உலகில் மிக விரைவாக போடப்பட்ட நெடுஞ்சாலை என்ற பெருமையை இந்த சாலை பெறும். இந்த பணிக்காக பொறியாளர்கள், பாதுகாப்பு வல்லுநர்கள், நில அளவை அதிகாரிகள் உள்பட 700 பேர் மற்றும் சாலைப்பணியாளர்கள் 800 பேரைக் கொண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட இருக்கிறது.
@NHAI_Official #आजादीकाअमृतमहोत्सव #AmritMahotsav #Amravati #Akola #National #Highway #worldrecord pic.twitter.com/KETiH4mHSi
— Deonath Gandate (@DevShilpa14) June 2, 2022
இந்த தொலைவிற்கான சாலையைப் போடுவதற்கு சாதாரணமாக சுமார் 6 மாதங்கள் ஆகும். ஆனால், 108 மணி நேரத்திற்குள் 75 கிலோ மீட்டர் சாலையை போட்டு முடித்தால், கத்தார் நாட்டில் உள்ள தோகாவில், அரசு நிறுவனமான அஷ்கான் மூலம் 25.275 கிலோ மீட்டர் தூரம் சாலை போடப்பட்ட சாதனையை முறியடிக்க முடியும். தோகாவில் போடப்பட்ட சாலையின் அகலம் 4.5 மீட்டர்கள் என்ற நிலையில் அமராவதி மற்றும் அகோலா இடையிலான சாலை 9 மீட்டர்கள் ஆகும். இந்த அடிப்படையில் 75 கிலோ மீட்டர் தூரம் கணக்கிடப்பட்டுள்ளது.
கின்னஸ் புத்தகத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 நிபுணர்கள் இந்த கட்டுமானப் பணியை 3 ஷிப்ட்களாகப் பிரித்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு 1000 உணவுப்பொட்டலங்கள் பணியிடங்களிலேயே வழங்கப்படும். இதற்காக 11,000 சப்பாத்திகள், 220 லிட்டர் சாம்பார், மற்றும் 280 கிலோ காய்கறீகள் பயன்படுத்தப்படவிருக்கின்றன. சாலை போடுவதற்காக 34,000 டன் பிட்யூமன் பயன்படுத்தப்படும் என்றும், 4 கலவை அமைப்புகள் தொடர்ச்சியாக இந்த பணிக்காகப் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கான 4 வழிச்சாலையை 24 மணி நேரத்திற்குள்ளாக போட்டு ஒரு உலக சாதனையும், சோலாபூர் மற்றும் பீஜபூர் இடையிலான பிட்யூமன் சாலையை 24 மணி நேரத்திற்குள் போட்டு மற்றொரு உலக சாதனையையும் இந்திய நெடுஞ்சாலைத்துறை படைத்துள்ளது. அமராவதி மற்றும் அகோலா இடையிலான சாலைப் பணிகள் குறித்த நேரத்திற்குள் முடிக்கப்பட்டால் இந்திய நெடுஞ்சாலைத்துறையில் இது ஒரு மைல்கல்லாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.